பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

900

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

விலை பயங்கரமாக ஏறியிருக்கும் இந்தக் காலத்திலும், அன்னையாரையும் அவர் குழுவினரையும், அழைத்து வரவும், கொண்டு போய் விடவும், அதே பெரிய கார்களையே சுலைமான் சேட் தொடர்ந்து கொடுத்து வந்ததை, அவருடைய பெருந்தன்மை என்று கொண்டாடிப் புகழ்ந்தது ஊர்.

“நம்பளுக்கு ஆண்டவன் கொடுக்கிறான். நம்பள் நல்ல காரியங்களுக்கும், நல்லவங்களுக்கும் கை நிறையக் கொடுக்கிறோம்” என்று சுலைமான் சேட் அடர்ந்த தாடியினிடையே வெற்றிலைக் காவியேறிய பற்கள் தெரியச் சிரித்தபடி அடிக்கடி சொல்லுவார்.

சுலைமான் சேட்டின் பெருமுயற்சியால் அலைக்கரைப்பட்டிக்கும், அதன் சுற்றுப்புறத்துக் கடற்கரை ஊர்கள் சிலவற்றுக்குமாக அலைக்கரைப்பட்டியில் ஒரு தந்தி ஆபீஸ் வந்திருந்தது. சுலைமான் சேட் போன்ற பெரிய வர்த்தகர்களுக்கு அங்கே அவசரமான துரிதச் செய்திப் போக்குவரத்துக்காகத் தந்தி அலுவலகம் வந்தது மிகவும் வசதியாயிருந்தது.

ஆனால், தந்தி அலுவலகம் வந்து பல ஆண்டுகள் ஆகியும், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என வருந்தும் ஓர் ஆத்மா அந்தக் கிராமத்தில் உண்டு என்றால், அதுதான் நிருபர் சாமிநாதன். பக்கத்து நகரத்திலிருந்து வெளி வரும் தினசரிகள், தலைநகர் சென்னையிலிருந்து வெளிவரும் தினசரிகள் எல்லாவற்றுக்கும் அந்த வட்டாரத்து நிருபர் அவர்தான்.

தபால், தந்தி,டெலிபோன் கட்டணங்கள் மானாவாரியாக உயர்ந்து விட்ட பின் பல தினசரிகள் தங்களுடைய நிருபர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிச் சாதாரணமான - அதிமுக்கியமில்லாத எந்தச் செய்தியையும் டெலிபோனிலோ, தந்தியிலோ அனுப்பினால் அதற்கான செலவை நிச்சயமாகக் காரியாலயம் அனுமதிக்காது என்றும், சாதாரணச் செய்திகளைச் சாதாரணத் தபாலில் அனுப்பினால் போதும் என்றும் அறிவித்து விட்டன. அந்தச் சுற்றறிக்கையிலேயே எந்தச் செய்தியை டெலிபோனிலோ, தந்தியிலோ அனுப்பலாம் என்பதற்கும் முன்மாதிரியான சில செய்திகளும் தந்திருந்தார்கள். அந்த மாதிரியான ஒரு செய்தி அங்கே ஆறாண்டுகளில் ஒரே ஒருமுறைதான் கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதைத் தந்தியிலோ, டெலிபோனிலோ அனுப்ப முடியாமல் போய் விட்டது. அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர்-அடை மழைப் புயல் காலங்களில் கடல் கொந்தளிக்கும். அத்தகைய ஒரு ஸீஸனில் ஒரு முறை கடல் கொந்தளிப்பு அதிகமாகிக் கடலுக்குள் முதல் நாளிரவு மீன் பிடிக்கப் போயிருந்த இருபத்தைந்து செம்படவர்கள் மாண்டு போக நேரிட்டு விட்டது. ஊருக்குள் புயல் கொந்தளிப்பில் தந்தி - டெலிபோன் போக்குவரத்தும் சில நாட்கள் துண்டிக்கப்பட்டுப் போனதால், அந்த அதிமுக்கிய நியூஸை அலைக்கரைப்பட்டி கிராமத்திலிருந்து நிருபர் சாமிநாதன் தந்தி மூலம் அனுப்ப முடியாமலே போய் விட்டது. பக்கத்து நகரத்திலிருந்து கலெக்டர் வெளியிட்டபுயல் சேதம் பற்றிய அறிக்கை நிருபரை முந்திக் கொண்டது. கலெக்டரின் அறிக்கை வெளியான மறு நிமிஷமே அதிமுக்கியமான அந்த நியூஸ் பழசாகி விட்டது.