பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124. மறத்திற்கும் அதுவே துணை

ஜான்சன் துரையை நான் முதல் முதலாகச் சந்தித்தது அப்பர் கூனூரில் உள்ள ‘சிம்ஸ்’ பூங்காவில் தான். எங்கள் இருவருக்குமிடையே நட்பு வளரக் காரணமாக இருந்தது நாய் வளர்ப்பதில் இருவருக்கும் இருந்த பொது அக்கறையே. நான் முதலில் ஜான்சன் துரையைக் கண்ட போது தன்னுடைய கம்பீரமான பதினாறடி வேங்கை போன்ற ‘ஹவுண்ட்’ நாயைப் பிடித்தவாறு ‘சிம்ஸ்’ பூங்காவின் புல்வெளியில் அவன் உலாவிக் கொண்டிருந்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் முதலில் நாயைத்தான் பார்த்திருந்தேன். பிறகுதான் துரையைப் பார்த்தேன். அந்த நாயின் கம்பீரமான ஆகிருதியே என் கவனத்தைக் கவர்ந்தது.

அதன் பின் நான் வலுவில் சென்று என்னைத் துரைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். எங்கள் உரையாடல் ஆங்கிலத்தில் நிகழ்ந்தது. பரஸ்பர அறிமுகங்கள் முடிந்த பின்,”மிஸ்டர் ஜான்சன்! ஐ லைக் திஸ் டாக்வெரி மச்” என்று ஆரம்பித்ததுமே, துரை அவசர அவசரமாகக் குறுக்கிட்டு, “டோன்ட் கால் ஹிம் டாக். ஹிஸ் நேம் இஸ் ஸீஸர். ஹி இஸ் மோர் தென் மை ஸன்” என்று என்னைத் திருத்தினான்.

அந்த நாயின் மேல் அவன் வைத்திருந்த பாசத்தையும், பிரியத்தையும் கண்டு நான் அயர்ந்து போனேன்.

அதற்கு மறு வாரம் உதகை நாய்க் காட்சியில் மீண்டும் அவனையும் அந்த 'ஹவுண்டையும்’ கண்டேன். அவனுடைய ஸீஸர்தான் அந்தக் காட்சியில் சிறந்த நாய்க்கான முதற் பரிசைப் பெற்றது. அந்த நாயின் மேல் எனக்கு அலாதிப் பிரியமே ஏற்பட்டு விட்டது. கன்னிங்ஹாம் எஸ்டேட் உரிமையாளனான ஜான்சன் துரைக்கு வயதாகி விட்டது. நாலைந்து ஆண்டுகளுக்கு முன் அவன் மனைவியும் காலமாகி விட்டாள். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. அவன் மனைவி காலமானதிலிருந்தே எந்தச் சமயத்திலும் எஸ்டேட்டை விற்று விட்டு அவன் ஊர் திரும்பலாம் என்று கூனூரில் பேசிக் கொண்டார்கள். ஊர் திரும்புகிறவர்கள், அதுவும் நாடு விட்டு நாடு செல்கிறவர்கள், வளர்ப்பு நாயை உடன் கொண்டு செல்ல வசதி இல்லை என்பதால் அவன் ஊருக்குச் செல்லும் போது என்ன விலை கேட்டாலும் கொடுத்து அந்த ‘ஹவுண்டை’ வாங்கி விடுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வேறு சில நாய்கள் இருந்தாலும், அந்த ஹவுண்டின் மேல் எனக்கு ஒரு மோகம் பிறந்து விட்டது.

சென்னையிலும், உதகையிலும், அப்பர் கூனூரிலுமாக மூன்று மேல் நாட்டுப் பாணியிலான ஒட்டல்களை நடத்தி வரும் எனக்கு இந்த மூன்று ஊர்களிலும் மாற்றி மாற்றி இருக்க வேண்டியிருக்கும். வேட்டை நாய் வகையைச் சேர்ந்த ஹவுண்டிலும்