பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறத்திற்கும் அதுவே துணை

911

ஜான்சன் துரையின் ஸீஸர் தனி ரகம், அதனுடைய குறிப்பறிதலும், மோப்ப சக்தியும், புரிந்து கொள்ளும் தன்மையும் இணையற்றவை. ஒரு சமயம் ஜான்சன் துரையின் பங்களாவில் ஏதோ குழாய் ரிப்பேர் முடித்து விட்டுப் போகிற போது ஒருவன் பாத்ரூமிலிருந்து ஒரு சோப்பையும், நாலைந்து புத்தம் புது கில்லெட் பிளேடுகளையும், ஒரு பழைய ரேஸரையும் எடுத்து ட்ரெளஸர் பாக்கெட்டில் அடைத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறான்; அவ்வளவுதான். அந்தப் பிளம்பர் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டுவதற்குள் ஸீஸர் புலியைப் போல் பாய்ந்து, அவனைக் கவ்விப் பிடித்து அவன் கால் சட்டையைப் பிராண்டத் தொடங்கி விட்டது.

அதன் பிடியில் கால் மணி நேரம் அவன் திணறி விட்டான். துரை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்ததும்தான் உண்மை புரிந்ததாம். அப்புறம் அவன் திருடிய சாமான்களைக் கொடுத்து விட்டுத் துரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்தானாம். இன்னொரு சமயம், துரையும் ஸீஸரும் காரில் எஸ்டேட் பகுதிக்குப் போயிருக்கிறார்கள். காரையும், காருக்குள் ஸீஸரையும், டிரைவரையும் ஒரு மரத்தடியில் விட்டு விட்டுத் துரை எஸ்டேட்டுக்குள் நடந்து போயிருக்கிறான். காருக்குள் டேங்க் நிறைய முப்பது முப்பத்தெட்டு லிட்டர் வரை பெட்ரோல் இருந்திருக்கிறது. எஸ்டேட் பகுதிக் கார்களில் பெட்ரோல் திருடித் தருகிற டிரைவர்களுக்குப் பணம் கொடுத்துப் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் தரகன் ஒருவன் டின்னோடும், டாங்கிலிருந்து பெட்ரோல் எடுக்கிற ட்யூபோடும் வந்து பெட்ரோல் திருடுகையில் ஸீஸர் கார்க் கதவைத் திறந்து கொண்டு குதித்து அவனைப் பிடித்துக் குரைக்கத் தொடங்கி விட்டது. நாய் குரைப்பதைக் கேட்டுத் துரை ஓடி வந்து விபரம் புரிந்து, அந்தத் திருட்டு டிரைவரை வேலையை விட்டு நிறுத்தினானாம். துரை முதுமலைக் காட்டுக்கு வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஸீஸர் அவனுக்கு அபார உதவிகள் எல்லாம் செய்திருக்கிறதாம். ஸீஸர், துரைக்குப் பி.எ. மாதிரி பயன்பட்டு வந்தது என்றார்கள்.

எனக்கோ அது மாதிரி நாய் ஒன்று கட்டாயம் தேவைப்பட்டது. என்னுடைய கூனூர் ஓட்டல் ஸ்டோர் ரூமிலிருந்து பண்டங்கள் தாறுமாறாகத் திருடு போய்க் கொண்டிருந்தன. டூட்டி முடிந்து வீடு திரும்பும் போது,வேலை ஆட்கள் சட்டைப் பை, டிராயர் பை, தொப்பி என்று எங்கெங்கோ மறைத்து வைத்துப் பொருள்களைத் திருடிக் கொண்டு போனார்கள். கூர்க்காவை விட்டுப் பைகளைச் சோதிக்கச் சொன்னால், வேலையாட்கள் அதைத் தன்மானப் பிரச்சனையாக்கி யூனியன் மூலம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தார்கள்; அல்லது கூர்க்காவையே கண்ணைக் கட்டிக் கொண்டு அல்லது மிரட்டித் தொடர்ந்து திருடிக் கொண்டே இருந்தார்கள். பாதாம் பருப்பு, ஏலக்காய், சர்க்கரை, குங்குமப்பூ, நெய் என்று விலையுயர்ந்த பொருள்களாகத் திருடு போயின. கூர்க்காவுக்குப் பக்கத்தில் ஸீஸர் மாதிரி ஒரு நாயைக் கட்டி வைத்து விட்டால் அந்த விஷயம் சுலபமாகி விடும் என்று எனக்குத் தோன்றியது.

இந்த எண்ணத்துடனேயே, ஸீஸரை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நான் ஜான்சன் துரை வீட்டுக்கு அடிக்கடி போய் வரத்