பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

912

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தொடங்கினேன். துரை அந்த நாயை வைத்திருந்த சவரணையைப் பார்த்ததும் எனக்குப் பயமாகவும், தயக்கமாகவும் கூட இருந்தது. ஓர் இளவரசனை வளர்ப்பது போல், ராஜோபசாரத்தோடு அந்த நாயை வளர்த்து வந்தான் ஜான்சன் துரை. அதற்கென்று தனிக் கட்டில், மெத்தை, பிளாங்கெட் எல்லாம் கூட இருந்தன. அவன் அதற்குப் போடுகிற பிஸ்கெட் ஹாலந்திலிருந்து வந்தது. அதைக் குளிப்பாட்டுகிற சோப், பூசுகிற பவுடர், எல்லாம் கூட விலை உயர்ந்தவையாக இருந்தன. அவனுடைய பங்களாவில் அதற்கு இறைச்சி வைக்கவும், உணவு படைக்கவும் அவன் வீட்டுப் பட்லர் பயன்படுத்தியது போல் பீங்கான் தட்டுக்களை என் ஹோட்டலில் டீலக்ஸ் ரூமில் தங்குகிறவர்கள் சூப் குடிப்பதற்குக் கூட நான் பயன்படுத்த முடிந்ததில்லை. கண்ணை இமை காப்பது போல் அந்த நாயைக் கட்டிக் காத்தான் ஜான்சன்.

அதற்கென்று தனி பட்லர், தனியாக வாராவாரம் வந்து பார்க்க ஒரு வெட்டர்னரி டாக்டர் உண்ணி ஒட்டாமல் ரோமம் கத்திரித்து விட்டு உடம்பில் ஆலிவ் ஆயில் போட்டு மஸாஜ் செய்ய ஒரு சலூன்காரன்.இப்படி எல்லாரும் இருந்தார்கள். ஸீஸரின் உடம்பு வெல்வெட் போல வழவழப்பாக இருந்தது. ஸீஸரின் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட ஜான்சனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குக் கச்சிதமாக நேரம் தவறாமல், வேளை வேளைக்கு எல்லாம் சாப்பிட வைத்தாக வேண்டும். ஒரு விநாடி முன் பின்னாகி விட்டாலும் வேலைக்காரர்களைத் திட்டித் தீர்த்து, வீட்டுக்கு அனுப்பி விடுவான் துரை. ‘ஸீஸர் இஸ் மோர் தென் மை ஸன்’ என்று அவன் என்னிடம் கூறியது நூற்றுக்கு நூறு பொருந்தும் என்று இப்போது தோன்றியது.

ஆரம்பத்தில் நான் ஜான்சன் துரை பங்களாவுக்குப் போன போதெல்லாம் என்னை வேற்றாளாகக் கருதிச் சீறிப் பாய்ந்து குரைத்த ஸீஸர், நாளடைவில் என்னோடு பழகி விட்டது. ஒவ்வொரு முறை நான் போகிற போதும் ஜான்சன் எனக்கு ஒரு சுவாரசியமான அநுபவத்தைச் சொல்வான். அந்த முறை முன்பு நடைபெற்ற உலகப் போரில் தான் இராணுவத்தில் பணியாற்றிய போது ஒரு 'டாங்க்’ சண்டையில் முழங்கால்களையும் கைகளையும் இழந்த தன் இளம் சகாக்கள் இருவரைப் பற்றிச் சொன்னான்.

“நான் அந்த இரு இளம் வீரர்களை உயிருக்குயிராக நேசித்தேன்.ஒரு மழை இரவில் டாங்க் சண்டையில் பயங்கரமாக அங்கஹீனப்பட்டு அவர்கள் நடுக்கும் குளிரில் திறந்த வெளியில் விழுந்து கிடந்தார்கள். அந்த முனையையே நாங்கள் காலி செய்து விட்டுப் பின்வாங்க வேண்டிய நிலைமை. எங்களுக்கான சப்ளைகள் எல்லாம் எதிரிகளால் துண்டிக்கப்பட்டு விட்டன. வைத்திய உதவிக்கு வழி இல்லை.

நாங்கள் வைத்திய வசதி, வாகன வசதி, வயர்லெஸ் சாதனங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மூன்று முனைகளில் ஜெர்மன் ஸோல்ஜர்கள் எங்களைத் தேடிப் பூண்டோடு அழிக்க விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள். தப்புவதற்கு ஒரே ஒரு முனைதான் இருந்தது. நான் ஒருவன்தான் அதில் உயிர் பிழைத்தவன். நான் எப்படியும் தப்பியாக வேண்டிய அவசரம்.