பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மறத்திற்கும் அதுவே துணை

913

அங்கஹீனப்பட்ட நண்பர்களைத் தூக்கிச் செல்ல முடியாது. அவர்கள் பனியில் சித்திரவதையாகி அணு அணுவாகச் சாவதோ, துன்பப்படுவதோ கூட என்னை வேதனைப் படுத்தக் கூடியவை தாம். எனக்கு மிகவும் பிரியமானவர்களைப் பற்றி நான் ஒரு கணத்தில் முடிவெடுக்க வேண்டியிருந்தது. பார்த்தேன், பசியிலும், பனியிலும் மெல்ல மெல்லச் சாவதை விட அவர்கள் உடனே நிம்மதியாகச் சாகட்டும் என்று முடிவு செய்து, நான் என் கைத் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு விட்டுத் தப்பி ஓடினேன். நீங்களே சொல்லுங்கள். எது தர்மம்? அப்போது அவர்களை நான் கொன்று விட்டு வந்ததுதான் அவர்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவி. நான் கொல்லாமல் விட்டுவிட்டு வந்திருந்தால் கழுகுகளும், நரிகளும் வந்து கொத்தி, அவர்களைச் சித்திரவதை செய்யலாம். அணு அணுவாக அவமானப்பட்டுச் சித்திரவதையாகச் சாவதை விட உடனடியான மரணம் என்பது மகத்தானது என்பது என் கருத்து. என்னுடைய உயிருக்குயிரான நண்பர்களுக்கு நான் அந்த வேளையில் அன்று செய்ய முடிந்த உதவி அவ்வளவுதான். என்ன செய்யலாம்?”

இந்த அனுபவத்தை மனமுருகி என்னிடம் விவரிக்கும் போதே ஜான்சனுக்குக் கண்களில் நீர் மல்கி விட்டது. அவன் உணர்ச்சி மயமாகி விட்டான். அவனால் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு உயிர் இழந்த தன் பழைய நண்பர்களின் நினைவு வந்து விட்டது.

சில மாதங்களில் நான் ஆவலோடு எதிர்பார்த்த சந்தர்ப்பமும் வந்தது. ஜான்சன் துரை எஸ்டேட்டையும், பங்களாவையும், காரையும் விலை பேசிக் கொடுத்து விட்டு நாடு திரும்பப் போவதாகப் பேச்சு அடிபடத் தொடங்கியது. கடைசியில் அது உறுதியும் ஆயிற்று.

எஸ்டேட், பங்களா எல்லாவற்றையும் விலை பேசி முடித்தாயிற்று. ஸீஸர் விஷயமாகப் பேசுவதற்கு நான் ஜான்சனைச் சந்திக்கச் சென்றேன். சுற்றி வளைத்து வேறு ஏதேதோ விஷயங்களைப் பேசி விட்டு, ஸீஸரைப் பற்றி ஆரம்பித்தேன்.

“எஸ்டேட், வீடு எல்லாவற்றையும் விற்க ஏற்பாடு செய்து விட்டீர்கள் மிஸ்டர் ஜான்சன்! ஸீஸரை என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் அதை ஒரு நல்ல விலை பேசி எனக்கு விற்கலாம் அல்லவா?”

இதைக் கேட்டு ஜான்சன் பதில் சொல்லாமல் என்னை ஏற இறங்கப் பார்த்தான். சிறிது தயங்கினான்; பின்பு சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினான்:

“எஸ்டேட், வீடு எல்லாவற்றையும் போல ஸீஸரை விற்க முடியாது. யாராவது சொந்த மகனை விலைக்கு விற்பார்களா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“வேறு வழி என்ன? நீங்கள் ஸீஸரை உங்களோடு விமானத்தில் கொண்டு போவதும் சாத்தியமில்லையே!”

“அது எனக்குத் தெரியும். நான் ஸீஸரைக் கொண்டு போவது சாத்தியமில்லைதான். ஆனால் நான் எப்படி அவனைக் கண்ணும் கருத்துமாகப் பேணிப் போற்றி வளர்த்தேனோ, அப்படி வளர்க்கிற ஒருவர் கிடைத்தால், விலையின்றியே கூட அவனைச் சுவீகாரம் கொடுக்கலாம்”


நா.பா. II - 19