பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

914

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நான் அப்படிவளர்க்க முடியுமென்று நம்புகிறேன் மிஸ்டர் ஜான்சன். எனக்கும் ஸீஸரைப் போன்ற ஒரு மகன் தேவை.”

“இந்தியர்களாகிய நீங்கள் ‘நாய்க்கு இவ்வளவு செலவா?’ என்று பல சமயங்களில் கஞ்சத்தனமாகக் கணக்குப் பார்ப்பீர்கள்! என் ஸீஸரோ இளவரசனைப் போல் செல்லமாக வளர்ந்தவன். எனது பராமரிப்பு இல்லாமல் அவன் ஏங்கவோ, தவிக்கவோ நேருவதை விட மரணம்கூட மேலானதாயிருக்கும். ஸீஸரின் ஸ்டேட்டஸ் தாழ்ந்து போகக் கூடாது ஸீஸருக்கு ரோஷம் அதிகம்.”

“ஒரு பத்து நாள் என் பராமரிப்பில் ஸீஸரை விட்டுப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால், எனக்குச் சுவீகாரம் போல் செய்யலாம்.”

நீண்ட வாதப்பிரதிவாதங்கள், நிபந்தனைகளுக்குப் பின் ஜான்சன் ஸீஸரைப் பத்து நாள் என் பராமரிப்பில் விட்டுப் பார்க்கச் சம்மதித்தான். அவன் நாடு புறப்படஇன்னும் பத்துப் பதினைந்து நாட்களே இருந்தன.

மறுநாள் காலை ஜான்சனே காரில் ஸீஸரை அழைத்து வந்து, என் பங்களாவில் கொண்டு வந்து விட்டுப் போனான். என் பங்களாவில் அதற்கான ஏற்பாடுகள் சரியாகவும், கெளரவமாகவும் இருக்கின்றனவா என்பதையும் சரி பார்த்தான்.

அவன் ஸீஸரைக் கொண்டு வந்து விட்டுப் போன சிறிது நேரத்துக்குப் பின் எனக்குச் சென்னையிலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. எனது சென்னை ஓட்டலில் வேலை நிறுத்தம் என்றும், உடனே நான் புறப்பட்டு வரும்படியும் தந்தி வந்தது. அந்தப் பதற்றத்தில் நான் அடுத்த கணமே காரில் கோவை விரைந்து, கோவையிலிருந்து விமான மூலம் சென்னை போய்ச் சேர்ந்தேன்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஓட்டலுக்கு நிறையச் சேதம். இருபது நாட்கள் நான் சென்னையிலிருந்து நகர முடியவில்லை. லட்சக்கணக்கில் நஷ்டம் வரும் போல் இருந்தது. இதனால் நான் ஸீஸரையே மறந்து விட்டேன்.

நடுவே வீட்டிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் சென்னை வந்த பின் ஒரு நாள் காலை ஜான்சன் துரை கூனூரில் என் வீட்டுக்குத் தேடி வந்ததாகவும், அவன் வரும் போது, ஸீஸர் வீட்டு முகப்பில் குப்பைத் தொட்டியருகே நின்றதைப் பார்த்து, அவன் என் வேலைக்காரனிடம் என் பொறுப்பற்ற தன்மையைப்பற்றிக் கன்னா பின்னாவென்று திட்டி விட்டு, நாயைத் திரும்ப அழைத்துப் போய்விட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தைப் படித்தவுடன் சிறிது நேரம் மனம் வேதனைப்பட்டாலும், அப்போது அதை விடத் தலை போகிற பிரச்னைகள் இருந்ததனால் அதை உடனே மறந்து விட முடிந்தது. சென்னை ஓட்டல் நிலைமைகள் சரியாகி, மூன்று வாரங்களுக்குப் பின் நான் மறுபடி கூனூர் திரும்பிய போது ஜான்சன் துரை லண்டனுக்குப் புறப்பட்டுப் போய் விட்டது தெரிய வந்தது. ஸீஸர் என்ன ஆயிற்று என்ற விவரம் மட்டும் தெரியவில்லை. துரையிடம் பட்லராக இருந்த ஜோஸப்பைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவன் வந்தான், விசாரித்தேன். அவன்