பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

916

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அது தாவி ஏறுகிறாப் போலன்னு நிறையப் படங்கள் எடுத்து தள்ளினான், போட்டோகிராஃபர்.

“போட்டோகிராஃபருக்குப் பணம் குடுத்து, பிலிம் ரோலை அப்படியே வாங்கிக் கொண்டு அவனைப் போகச் சொன்னாரு. வெளிக் கேட்டை சாத்திப் பூட்டச் சொன்னாரு. பிஸ்டலைக் கொண்டான்னாரு. எனக்கு எதுக்குன்னு புரியலே. ஆனா உடனே எடுத்துக் குடுத்தேன். ஸீஸரை அழைச்சிக்கிட்டுத் தோட்டத்து வடகோடியிலே ஒரு சண்பக மரம் உண்டுங்களே, அங்கே போனாரு. நான் பின்னாடியே போனேன். ஸீஸரைச் சண்பக மரத்திலே கட்டினாரு. பிஸ்டலை எடுத்தாரு. கொஞ்ச நேரம் சின்னப் புள்ளை கணக்கா விக்கி விக்கி அழுதாரு. அப்புறம் திடீர்னு ஸீஸரை நோக்கி மூணு வாட்டி சுட்டாரு. ஸீஸர் கதறித் துடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தது. நான் தடுக்க முடியலே. சுட்டதும் பிஸ்டலைக் கீழே எறிஞ்சுட்டு ஸீஸரோட உடலைக் கட்டிக்கிட்டு அரைமணி நேரம் கதறி அழுதாரு. அப்புறம் கல்லறையிலே எழுத்துச் செதுக்கற ஆளைக் கூட்டியாரச் சொன்னாரு. ஸீஸரை அந்த மரத்தடியிலேயே புதைச்சு, அதும் மேலே பதிக்கிற கருங்கல்லிலே, ‘ஜான்சனுக்குப் பிரியமுள்ள ஸீஸரின் இனிய உயிர் இங்கே உறங்குகிறது’ன்னு தேதி, மாசம், வருஷத்தோடு தமிழிலேயே செதுக்கணும்னு பேசி, அதுக்குப் பணமும் கொடுத்தாரு. அப்புறம் டாக்ஸியிலே ஏர்ப்போர்ட் போற வரை மெல்ல அழுதுகிட்டே வந்தாரு. நானும் வழியனுப்பப் போயிருந்தேன்.”

இவ்வாறு பட்லர் ஜோஸப் சொல்லி முடித்தான்.

“ஆமாம் பங்களாவை விலைக்கு வாங்கினவங்க சண்பக மரத்தடியிலே நாய் சமாதி இருக்கச் சம்மதிச்சாங்களா?”

“துரை அவங்ககிட்டக் கொடுக்கச் சொல்லி ஒரு லெட்டர் குடுத்தாரு. அதை நான் அவங்க கிட்டக் குடுத்துட்டேன். சமாதியை அவங்க ஒண்ணும் பண்ணலே. துரையோட ‘ஸென்டிமென்ட்ஸை’ அவங்க மதிக்கிறாங்கன்னே தெரியுது”

உடனே ஜோஸப்போடு அந்த மரத்தடிக்குப் போய்ப் பார்த்தேன். கறுப்புச் சலவைக் கல்லில் வெண்ணிற எழுத்துக்களில் ‘ஜான்சனுக்குப் பிரியமுள்ள ஸீஸரின் இனிய உயிர் இங்கே உறங்குகிறது’ என்று செதுக்கியிருந்தது.

அதைப் பார்த்ததும், முன்பு உலகப் போரின் போது தன் நெருங்கிய சிநேகிதர்களை ஓர் இக்கட்டான சமயத்தில் தானே சுட்டுக் கொன்றதாக ஐான்சன் என்னிடம் கூறிய சம்பவம் நினைவு வந்தது.

பேணி வளர்ப்பது மட்டுமே பிரியத்துக்கும் அன்புக்கும் அடையாளம் என்று நான் அன்று வரை புரிந்து கொண்டிருந்தேன். பிரியமாகப் பேணி வளர்க்க முடியாத போது அழித்து விடுவதும் கூட அன்பின் உயர்ந்த பக்குவத்துக்கு அடையாளந்தான் என்று இப்போது புதிதாகப் புரிந்து கொள்ள முயல்கிறேன்! ஆம் பிரியத்துக்கு மறுபக்கம் ஒன்றும் இருக்கத்தான் செய்தது.

(கலைமகள், தீபாவளி மலர், 1975)