பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : துல்லியமாக ஒரு மதிப்பீடு

921

“ துல்லியமாகப் பார்த்துதான் சொல்றீங்களா? இல்லே சும்மாவாச்சும் என்னை உற்சாகப் படுத்தறீங்களா?”

“முகஸ்துதிக்காக நான் எப்பவும் எதையுமே சொல்றதில்லை தம்பீ! என் மதிப்பீடு எப்பவுமே துல்லியமா இருக்கும். அட்சர லட்சம் பெறுகிற நயமான வாக்கு இது.”

“அப்போ இந்த அட்சர லட்சம் பெறுகிற நோட்டுப் புத்தகத்தை வச்சுக்கிட்டு, ஒரு பத்து ரூபாய் கடன் கொடுங்க. எனக்கு மெட்ராஸ் போக, சார்ஜுக்கு பணம் கொறையுது”.

ஒரு கணம் பழ. சொ. தயங்கினார். வேல்சாமியிடம் வாங்கிய நோட்டுப் புத்தகத்திலிருந்த மற்ற முப்பத்தொன்பது பாடல்களையும் நிதானமாகப் படித்தார். பின்பு எதுவும் பேசாமல் சிட்டை, பேரேடு, நோட்டு எல்லாவற்றையும் முறையாக எடுத்து நகை, பாத்திரம் முதலிய மற்ற அடகுப் பொருள்களுக்குப் பதிவது போல் பதிவு செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து வேல்சாமியிடம் நீட்டினார். நோட்டுப் புத்தகத்துக்கு இரசீதும் கொடுத்தார்.

அப்போது மணி நாலு அடித்து ஐம்பது நிமிஷம். வேல்சாமி பணத்தை வாங்கிக் கொண்டு இரயிலுக்கு நேரமாகி விட்டதே என்று விரைந்தான்.

“தம்பி அதிகமில்லை. ஒரே வட்டிதான் போட்டிருக்கேன். வட்டி மாசத்துக்குப் பத்துப் பைசாத்தான் வரும்.” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய பழ.சொவைக் கூட அவன் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பழ. சொ. நகைகள், வெள்ளிப் பாத்திரங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதைப் போல் அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தையும் எடுத்து அடகுக் கடை இரும்புப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துப் பூட்டினார்.

பழ. சொவை வசமாக மடக்கிப் பத்து ரூபாய் வாங்கி விட்டதாக உள்ளூற மகிழ்ந்தபடி சென்னைக்கு இரயிலேறினான் வேல்சாமி. இதன் பின் அவனுடைய நல்ல காலம் ஆரம்பமாயிற்று. முதல் படத்துக்கு அவன் எழுதிய பாடல்கள் எல்லாமே ‘ஹிட் சாங்ஸ்’ ஆகிப் புகழ் பெற்று எங்கும் ஒலித்தன. படிப்படியாகப் பேரும், புகழும், பொருளும் வளர்ந்தன. அவன் பெரிய ஆளாகி விட்டான்.

ஐந்து வருடங்கள் வரை வேல்சாமி ஊர்ப் பக்கம் திரும்பவே இல்லை. அந்த ஐந்து வருடங்களில் திரைப்படப் பாடல்களின் மூலம் புகழும், பொருளும் சேர்த்தது தவிர, ஏராளமான கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். அவை நன்றாக விற்றுக் கொண்டிருந்தன.ஏதோ பிரபல பத்திரிக்கை அவனைப் பேட்டிகண்ட போது, நீங்கள் ‘இது வரை எழுதியவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டதற்கு, “நான் சிறு வயதில் எழுதிய வறுமை நாற்பது என்ற தலைப்பிலான கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை” என்று அவன் பதில் சொல்லியிருந்தான். உடனே அவனுடைய பதிப்பாளருக்கு அந்த வறுமை நாற்பது என்ற கவிதைத் தொகுதியை விசாரித்து இரசிகர்களின் கடிதங்கள் குவிந்தன. பதிப்பாளர் வேல்சாமியிடம் வந்து ‘வறுமை நாற்பது’ பாடல்கள் புத்தகமாக வெளி வர வேண்டிய