பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

926

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சந்திக்க வந்த மாணவர்களை வரவேற்று அன்பாக இரண்டு வார்த்தை பேசி, “இனி, இப்படி நடக்காமல் கவனித்துக் கொள்கிறேன். சமையற்காரர்களையும் கண்டிக்கிறேன். தவறு நேர்ந்ததற்கு மன்னியுங்கள்” என்று அவர் ஆறுதலாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யத் தவறியதோடு, எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பது போல், “எல்லாம் நீங்க படிச்சுக் கிழிக்கிற லட்சணத்துக்கு இது போதும், போங்கடா” என்பது போல் எடுத்தெறிந்து பேசி விட்டார்.

உடனே அது பெரிய போராட்டமாக வெடித்து விட்டது. பொது உறவு அதிகாரி காம்பஸுக்குள் இருந்த தம் வீட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. மாணவர்கள் அவர் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. நாற்காலிகள், மேஜைகள் உடைந்தன. கற்கள் பறந்தன. ஒரே களேபரம். மெஸ்ஸிலும் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்டன. பொது உறவு அதிகாரி மன்னிப்புக் கேட்டாலொழிய, விட மாட்டோம் என்றார்கள் மாணவர்கள். பொது உறவு அதிகாரியோ மன்னிப்புக் கேட்க முடியவே முடியாது என்றார்.

அவருக்கு ஒரு குறைவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி மந்திரி டெலிஃபோன் மூலம் துணைவேந்தரை வற்புறுத்தினார். மந்திரியை எதிர்த்துக் கொண்டால் இன்னும் ஓர் ஐந்தாண்டு பதவியில் நீடிப்பது போய் விடும் என்ற பயம் துணைவேந்தருக்கு இருந்தது. அதனால் பொது உறவு அதிகாரி மேல் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹாஸ்டல் சொத்துக்கள், விடுதியைச் சேர்ந்த பொருள்கள் ஆயிரக்கணக்கில் சேதம் அடைந்துங் கூடத் துணைவேந்தர், சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கண்டிக்கவில்லை; அவரைக் கடிந்து கொள்ள முயலவும் இல்லை. பையன்களின் கோபம் இதனால் அதிகமாயிற்று.

“படிக்கிற பையன்கள் பணிவாகத்தான் போக வேண்டும்.விநயம் இல்லாவிட்டால் வித்தையைக் கற்க முடியாது” என்றார் துணைவேந்தர்.

“நான் அப்படி நினைக்கவில்லை சார்! பணிவாக இருப்பது எப்படி என்று நாம்தான் அவர்களுக்கு நடந்து காட்ட வேண்டும். நாமோ வீண் பிடிவாதம், வறட்டுக் கர்வம் இவற்றை வைத்துக் கொண்டு சுலபமாகத் தீர வேண்டிய பிரச்னையைக் கூட இழுத்தடிக்கிறோம். பணிவற்ற விதத்தில் பணிவைக் கூடக் கற்றுக் கொடுக்க முடியாது ஸார்.”

“எதைச் சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரபு? நான் அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?”

“நான் உங்களைச் சொல்லவில்லை ஸார்! தவறு செய்தவர்களுக்கு அந்தப் புத்தி இருக்க வேண்டும்.”

“ஏதோ மூத்தவன் சொன்னான் என்று மன்னித்து மறந்து விட்டு விட வேண்டியதுதானே?”