பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தலைமுறை இடைவெளி

927

“மன்னிப்பு ஒரு வழிப்பாதை அல்ல. நாம் மன்னித்தால்தான் அவர்கள் மன்னிக்க முடியும். இந்தக் காலத்து இளைஞர்கள் மூப்பு என்பதைத் தவறு செய்யும் உரிமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஸார்! யார் செய்தாலும் தவறு தவறு தான் என்பார்கள்.”

“நீங்களே மாணவர்களைப் போலப் பேசுகிறீர்களே! இந்தப் பல்கலைக்கழகத்தின் வார்டன் நீங்கள்தான் என்பதை நினைவு வைத்துக் கொண்டு பேசுங்கள்.”

“பதவிகளையே நினைத்துக் கொண்டிருந்தால் மனிதத் தன்மைகள் மறந்து போய் விடுகின்றன, ஸார்!”

“எனக்கு இந்தப் பையன்களோடு மாரடித்து, மாரடித்து அலுத்து விட்டது. பல்கலைக் கழகத்தை ஒரு மாத காலத்துக்கு மூடி விட்டுக் காவலுக்காகப் போலீஸை உள்ளே அழைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.”

“அப்படிச் செய்தால், சுலபமாகத் தீரக்கூடிய பிரச்சினை மேலும் குழப்பமாகி விடும். உண்ணும் உணவிலே புழு பூச்சியும், அசுத்தமும் இருந்தால் உங்கள் பையனோ, என் சகோதரனோ கூடக் கோபப்பட நியாயம் இருக்கிறது. கமிஷன் கொடுக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டமான கடைகளில் பல்கலைக் கழக உணவு விடுதிக்கான காய்கறிகள், சாமான்களை வாங்குகிறார்கள். அதனால் வருகிற வினைதான் இது.”

. “ஏதேது? நீங்களே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பீர்கள் போல் இருக்கிறதே!”

“உண்மையை ஏன் ஸார் மறைக்க வேண்டும்? தவறு நம் பக்கம் இருந்தால், நாம் ஒரு குழந்தையிடங் கூட வயது வித்தியாசம் பாராமல் துணிந்து உடனே மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும் ஸார்!”

“உங்களுக்கு வயதும், அநுபவமும் குறைவாக இருப்பதனால்தான் நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் பிரபு! பையன்களிடம் விட்டுக் கொடுத்தால், அப்புறம் நம்மை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.”

“இந்தக் காலத்து இளைஞர்கள் வறட்டுப் பிடிவாதத்தையும், முரண்டுகளையுந்தான் மதிக்க மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். நாம் சிறிது விட்டுக் கொடுத்தால் அவர்களை நிச்சயம் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். ‘இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்று ஹாஸ்டல் பி.ஆர்.ஒ. ஊர்வலமாக வந்த மாணவர்களிடம் ஒரு வார்த்தை ஆறுதலாகச் சொல்லியிருந்தால், இவ்வளவு தூரம் இந்தப் பிரச்னை வளர்ந்திருக்காது ஸார்!”

“சரி! உமக்கும் எனக்கும் ஒரு பந்தயம். நாளைக் காலை வரை டயம் தருகிறேன். மாணவர்களோடு கலந்து பேசி, உம் கொள்கைப்படியே விட்டுக் கொடுத்து நிலைமையைச் சரி செய்தால், என் கையிலிருந்து உமக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்.