பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

928

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உம்மால் முடியுமா? முடியா விட்டால், நாளைக் காலையில் பல்கலைக்கழகத்தைக் கால வரையறையின்றி மூடும்படி உத்தரவிட்டு விட்டுப் பாதுகாப்புக்குப் போலீஸை அழைக்க வேண்டியதுதான்.”

“நாளைக் காலை வரை அவசியம் இல்லை, ஸார்! இன்றிரவே நிலைமையைச் சரி செய்ய என்னால் முடியும். ஆனால் ஒரு நிபந்தனை.”

“என்ன நிபந்தனை?”

“பையன்களிடம் திமிராகப் பேசிய ஹாஸ்டல் பி.ஆர்.ஓ.வைத் தற்காலிகமாக வாவது சஸ்பெண்ட் செய்து நீங்கள் ஓர் ஆர்டர் தர வேண்டும்.”

“அது முடியாத காரியம். நான் மந்திரிக்கும் பயந்தாக வேண்டும். பி.ஆர்.ஓ. மந்திரிக்கு மிகவும் வேண்டியவர்.”

“அவர் மட்டும் மாணவர்களிடம் ‘நீங்கள் படித்துக் கிழிக்கிற லட்சணத்துக்கு இது போதும். போங்க’ன்னு சொல்லியிருக்காவிட்டால் இவ்வளவு தூரம் வந்திருக்காது.”

“என்ன செய்யறது? அவர் போதாத வேளை! சொல்லித் தொலைத்திருக்கிறார்.”

“அது உங்களுக்கும், எனக்கும், பல்கலைக்கழகத்துக்கும் அல்லவா போதாத வேளையாக முடிந்து விட்டது?”

இதற்குத் துணைவேந்தர் பதிலெதுவும் கூறவில்லை. பிரபுவே மேலும் பேசினார்:

“ஒரு தனி நபருடைய பிடிவாதத்துக்காகப் பல்கலைக்கழகத்தையே மூட முடியாது. அவரைச் சஸ்பெண்ட் செய்ய முடியா விட்டாலும், ஹாஸ்டலுக்குக் காய்கறி, பலசரக்குச் சாமான்கள் வாங்குகிற பொறுப்பை அவரிடமிருந்து வார்டனாகிய என் பெயருக்கோ, வேறு ஒருவர் பெயருக்கோ உடனே மாற்றுங்கள். அடுத்த நிமிஷமே இந்த ரெஸிடென்ஷியல் யூனிவர்ஸிடி முழுவதும் அமைதியடைந்து பழைய நிலைக்குத் திரும்பச் செய்து விடலாம். ‘நாங்கள் செய்த எந்தத் தவற்றுக்காகவும் வருந்த மாட்டோம். மாணவர்களே பணிந்து போக வேண்டும்’ என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது நடக்காது. பிடிவாதம் மற்றொரு பிடிவாதத்தை வெல்லாது; பிடிவாதத்தை அன்பாலும், விட்டுக் கொடுப்பதாலுமே ஜெயிக்க முடியும்.”

துணைவேந்தர் தயங்கினார். சிந்தித்தார். நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு வேறு வழி இல்லை என்ற காரணத்தால், வேண்டா வெறுப்பாக வார்டனின் நிபந்தனைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.

“பி.ஆர். ஓ.வைச் சஸ்பெண்ட் செய்தால்தான் அவருக்கும், அவருக்கு வேண்டிய மந்திரிக்கும் கோபம் வரும். ‘ஹாஸ்டலுக்கு வேண்டிய காய்கறி, பலசரக்கு, பால், தயிர் முதலிய சாமான்கள் வாங்கும் பொறுப்பை இனிமேல் வார்டனே கவனித்துக் கொள்வார் என ஆர்டர் போடுவதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை, பிரபு!”

“உங்களுக்குச் சிரமம் இருக்காது ஸார்! ஆனால் பி.ஆர்.ஓ. அதனால் சிரமப்படுவார். சாமான்கள் வாங்குவதில்தான் அவருக்கு லாபம் இருக்கிறது.”