பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தலைமுறை இடைவெளி

929

“புரிகிறது” என்றார் துணைவேந்தர். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே ஹாஸ்டலுக்குச் சகல சாமான்களும் வாங்கும் ‘பர்ச்சேஸிங் அதாரிடி’யாக வார்டன் பிரபுவுக்கு அதிகாரம் அளிக்கும் ஆர்டரை அவர் கையில் தந்தபடியே,

“இந்த ஆர்டரை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய கொந்தளிப்பை எப்படித்தான் அடக்கப் போகிறீர்களோ, எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன். உமக்கும் எனக்கும் பந்தயம் வேறு இருக்கிறது.” என்றார் துணைவேந்தர்.

“பந்தயத்தில் நிச்சயமாக நான் ஜெயிக்கிறேன். ஆயிரம் ரூபாய் தயாராக இருக்கட்டும்!” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் டாக்டர் பிரபு.

அப்போது மாலை ஆறு மணி. துணை வேந்தர் பிரபு திரும்பி வர இரவு எவ்வளவு நேரமானாலும் அதுவரை தம் அலுவலகத்திலேயே காத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்.

துணைவேந்தருக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சிறு அதிகார மாறுதல் உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு, மாணவர்களின் கொந்தளிப்பை அடக்கி விட முடியும் என்று தோன்றவில்லை. ‘பி.ஆர்.ஓ.வை டிஸ்மிஸ் செய்’ என்றுதான் மாணவர்கள் வற்புறுத்துவார்கள் என்று எண்ணினார் துணைவேந்தர். பிரபு நிச்சயமாகப் பந்தயத்தில் தோற்றுப் போய் ஆயிரம் ரூபாயைத் தம்மிடம் எண்ணி வைக்கும்படி நேரப் போகிறது என்றுதான் துணைவேந்தர் நம்பினார்.

ஆறே முக்கால் மணிக்கு அறையின் முகப்பில் பால்கனிக்கு வந்து வெளியே பார்த்த போது, ஹாஸ்டல் புல்வெளியில் மாணவர்கள் கூட்டத்தின் நடுவே பிரபு பேசிக் கொண்டிருப்பதைத் துணைவேந்தர் குலசேகரன் கவனித்தார். உள்ளூரிலுள்ள பிரபல ஹோட்டலின் ‘காட்டரிங் சர்வீஸ் வேன்’ ஒன்று சிற்றுண்டி, காப்பியுடன் ஹாஸ்டலுக்குள் நுழைவதையும் கண்டார்.

சிறிது நேரத்தில் மாணவர்களுக்குச் சிற்றுண்டி, காபி வழங்கப்படுவதையும் துணைவேந்தர் கவனித்தார். பிரபு தண்டச்செலவு செய்வதாகத் தோன்றியது அவருக்கு. அறைக்குத் திரும்பி யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஃபைலை எடுத்துப் புரட்டத் தொடங்கினார். துணைவேந்தரின் மனம் ஃபைலில் செல்லவில்லை.

ஏழே கால் மணிக்கு, “மே ஐ கம் இன் ஸார்?' என்ற வேண்டுதலோடு, இரண்டு மாணவர்கள் பின் தொடரத் துணைவேந்தர் அறைக்குள் நுழைந்தார் வார்டன் பிரபு.

முதலில் தம்முடன் வந்த மாணவர்களைத் துணைவேந்தருக்கு முன் அமரச் செய்து விட்டுப் பின் பிரபுவும் அமர்ந்தார். வந்திருக்கும் மாணவர்கள் இருவரும் மாணவர் யூனியனின் தலைவரும், செயலாளரும் என்பது துணைவேந்தருக்குத் தெரியும்.

“ஸார்! நாங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். பிரச்னையைச் சுமுகமாகவும் மாணவர்களாகிய எங்கள் மேல் அதுதாபத்துடனும் தீர்த்து வைத்த
நா.பா. 11 - 20