பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

930

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

டாக்டர் பிரபுவுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்கள் மாணவர் பிரதிநிதிகள் இருவரும்.

துணைவேந்தருக்குத் தம் செவிகளையே நம்ப முடியவில்லை. பிரபுவிடம் ஏதாவது வசிய மருந்து இருக்குமோ என்று வியப்பாக இருந்தது அவருக்கு.

“இனி நீங்கள் போகலாம்” என்று பிரபுவே மாணவர்களிடம் கைகுலுக்கி விடை கொடுத்தார். துணைவேந்தரோடும் கை குலுக்கி விடைபெற்றுக் கொண்டு மாணவர்கள் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும், “மிஸ்டர் பிரபு! என்னிடம் ரொக்கமாக அவ்வளவு பெருந்தொகை இல்லை. ஒரு செக்தருகிறேன்” என்று கூறியபடியே ஆயிர ரூபாய்க்குச் செக் எழுதத் தொடங்கினார் துணைவேந்தர்.

“பரவாயில்லை. எப்படி ஆனாலும் சரி. உங்கள் செக்கை நான் பணமாக மாற்றப் போவதில்லை, ஸார்! சும்மா ஒரு நற்சான்றிதழைப் போல் ஃப்ரேம் போட்டு மாட்டப் போகிறேன்” என்றார் பிரபு. “உங்கள் இஷ்டம்” எனப் புன்முறுவல் பூத்தவாறே பிரபுவிடம் செக்கைக் கொடுத்து விட்டு, வியப்பு மேலிட்ட குரலில், “என்ன ஐயா மந்திரம் போட்டீர்? ஆறு மணிக்குப் புறப்பட்டுப் போய் ஏழரை மணிக்குள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வந்து விட்டீரே!” என்று வினவினார் துணைவேந்தர்.

“ஒரு மந்திரமும் இல்லை. எல்லாத் தரப்பு மாணவர்களையும் கூப்பிட்டு அன்போடு பேசினேன். அவர்கள் சொல்வதையும் பொறுமையோடு கேட்டேன். பின்பு ஹாஸ்டலுக்குச் சாமான்கள் வாங்கும் பொறுப்பு மாற்றம் பற்றிய உங்கள் ஆர்டரைக் காட்டினேன். அப்படிக் காட்டிய சுவட்டோடு ‘ஹாஸ்டலுக்குக் காய்கறி, பால், தயிர், பலசரக்கு வாங்கும் விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூற, ‘ஸ்டூடண்ட்ஸ் அட்வைஸரி பேனல்’ ஒன்று தேவை. அதற்கு நீங்களே பெயர்களைத் தாருங்கள்’ என்று கூறி, அவர்களில் பன்னிரண்டு பேர் கொண்ட ஓர் ‘அட்வைஸரி பேனல்’ அமைத்தேன். முடிந்ததும் என் சொந்தச் செலவில் வெளியே இருந்து குட்லண்ட்ஸ் ஓட்டல் காட்டரிங் ஸர்வீஸ் மூலம் மாணவர்களுக்கு ஒரு டீ கொடுத்தேன். பிரச்னை சுலபமாக முடிந்து விட்டது.”

“உண்மையாகவா? பிரமாதம்!”

“பிரமாதம் ஒன்றும் இல்லை. சாதாரணமாகத்தான் இதை நான் செய்தேன். கடுமையாக இருப்பதனால், எந்தச் சிக்கலும் தீராது. தாராள மனப்பான்மை ஒன்றுதான் சிக்கலைத் தீர்க்கும்” என்றார் பிரபு.

துணைவேந்தர் எதிரே நிற்கும் அந்த முப்பத்திரண்டு வயது இளைஞரின் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.