பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

934

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தென்னிந்திய இரயில்வே வரைபடத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அந்த அளவிற்கு அதன் புகழ் நிலை பெற்றிருந்தது.

இரவு பத்து மணி சுமாருக்கு நான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பிய போது காவியகங்கையின் பொது உறவு அதிகாரியிடமிருந்து அனுப்பப்பட்ட ‘கவர்’ ஒன்று எனக்காகத் தயாராகக் காத்திருந்தது. அறைக்கதவைத் திறந்து விளக்கைப் போட்டுக் கொண்டு அந்த உறையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். விவரங்கள் தமிழில் சுத்தமாக டைப் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் நான் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் விளக்கிக் கூறப்பட்டிருந்தன.

“நாளைக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காவிய கங்கையில் நிகழும் கவி சிரேஷ்டரின் தொண்ணூறாவது ஜன்ம தினம் முழுவதையும் உடனிருந்து காணவும், புகைப்படங்கள் எடுக்கவும் இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

கவி சிரேஷ்டர் குமுத சந்திரரின் தளர்ந்த உடல் நிலை காரணமாக அவரிடம் நேரடியாக எதுவும் கேள்விகள் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும். பொதுவாக, அவரது ஒவ்வொரு பிறந்த நாளும் ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ நிறைந்தது. அவருக்கு நாளைய தினமும் அப்படியே. கடந்த காலங்களில் அவர் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு அளித்திருக்கும் எல்லாப் பேட்டிகளிலும் தவறாமல் ஒரு விஷயத்தை வற்புறுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

“எனது மெளனங்களிலும் தனிமைகளிலும் நான் இதுவரை எழுதாத ஒரு புதிய கவிதைக்குத் தயாராகிறேன். நான் எல்லாவற்றையும் அற்புதமாக எழுதி முடித்துத் தமிழை வளப்படுத்தி விட்டதாகச் சொல்லுகிறார்கள். எழுதியவற்றை மறந்து விடுவதும், எழுதப்பட வேண்டியவற்றுக்காக ஏங்குவதும், எழுதப்பட முடியாமல் நழுவுகிறவற்றுக்காகத் தவிப்பதும் ஒவ்வொரு சிரஞ்சீவிக் கவிஞனும் அடைகிற வேதனைகளே” என்பது கவி சிரேஷ்டர் குமுத சந்திரரின் கருத்து.

ஆகவே, அவருடைய மெளனத்தையும், அந்த மோனத்தின் மூலம் அவர் புரியும் கவிதைத் தவத்தையும் கலைக்கக் கூடாது. இந்தப் பிறந்த நாள் விழாக் கூடக் காவிய கங்கை நிர்வாகம் விரும்பிக் கொண்டாடுகிறதே ஒழிய, விழாக்களும், ஆரவாரங்களும், பரபரப்பும் அவரை ஒரு போதும் பாதிப்பதில்லை. அவர் அவைகளுக்கு அப்பாற்பட்டவர்.

இவை தவிர, வேறு விவரங்கள் தேவையானால் காவிய கங்கையின் பொது உறவு அதிகாரியை அணுகி அறிந்து கொள்ளவும்” என்று குறிப்பிட்டிருந்தது. கவி குமுதசந்திரரின் தொண்ணூறாவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பற்றிய அச்சிட்ட விவரமும் இணைக்கப்பட்டிருந்தது. மறு நாள், அதற்கடுத்த நாள் ஆகிய இரண்டு தினங்களுக்குமான உணவு விடுதிக் கூப்பன்களும் உறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. ‘காவிய கங்கை’ காம்பஸின் விவரமான வரைபடமும் கவி சிரேஷ்டரின் புகைப்படம் ஒன்றும் உறையிலிருந்தன. கையோடு ஊரிலிருந்து எடுத்து வந்திருந்த கவி குமுதசந்திரரின் எல்லாக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பை எடுத்துப் புரட்டினேன்.