பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

935

பல நூறு பதிப்புக்கள் விற்றிருந்த அந்தப் புத்தகத்தின் எல்லாப் பிரதிகளிலும் முதல் பக்கம் முதல் கவிதை இருக்க வேண்டிய இடம் ‘இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை’ என்ற தலைப்புடன் காலியாக விடப்பட்டிருந்தது. இதை அவரிடமே நேரில் கேட்டு விடுவது என்று எண்ணிக் கொண்டு வந்திருந்தேன் நான்.

ஆனால், இப்போது காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி விதித்திருக்கும் நிபந்தனைப் படி கவி குமுதசந்திரரிடம் நேருக்கு நேர் அதைக் கேட்டறிய வாய்ப்பில்லை.

எல்லாக் கவிதைப் புத்தகங்களிலும் முகப்பில் அழகிய வண்ணத்தாளில் கவி குமுதசந்திரரின் புகைப்படம் அச்சிடப் பட்டிருந்தது. தாடி மீசையோடு கூடிய அந்த முகத்தை அரவிந்தரின் முகத்துடனோ, இரவீந்திரநாத் தாகூரின் முகத்திடனோ ஒப்பிட முடியாது. இந்த இருவரையும் விட அதிக கம்பீரமும், ஆண்மையும் ஒளிரும் முகமாக இருந்தது அது. அந்த முகத்தின் முதிர்ச்சியில் தெரிந்தது கிழட்டுத்தனமாக இல்லை. முதுமைக் கனிவாக இருந்தது. கண்களின் ஒளியும், கூர்மையும் சிறிது கூடக் குறையவில்லை.

எப்படியும், இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுப் பத்து வருடங்களாவது ஆகி இருக்க வேண்டும். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை நாளைக்கு நேரிலேயே பார்த்து விடலாமே. காலையில் ஞாபகமாகக் காமிராவில் ஃபிலிம் லோட் செய்து கொள்ள வேண்டும். ‘காவிய கங்கை’யைப் பொறுத்த வரை முந்திய இரவிலேயே விடியப் போகிற நாளின் கோலாகலங்கள் தொடங்கி விட்டாற் போலக் கலகலப் பாக இருந்தது. திருவிழாவிற்கு முந்திய கொடியேற்ற நாள் போல விளங்கியது அன்று.

மகாகவி குமுதசந்திரரைப் பொறுத்த வரை எனக்கு இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருந்தன. அந்த இரண்டு விஷயங்கள் மட்டும் தெளிவாகி விட்டால் கூடநான் எங்கள் பத்திரிகைக்குக் ‘காவிய கங்கை’யைப் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை உருவாக்கி அளித்து விட முடியும். ஆனால், இரண்டு விஷயங்களும் தெரிந்தாக வேண்டுமே?

ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கும் அவர் ஏன் இன்னும் தனது முதல் கவிதையை எழுதவே இல்லை என்கிறார்?

பெண்களையும், அவர்கள் அழகு, நளினம், இயல்புகள் எல்லாவற்றையும் இத்தனை

சிறப்பாகப் பாடியுள்ள அவர் ஏன் இன்னும் நைஷ்டிகப் பிரம்மசாரியாக வாழ்கிறார்?

என் மனத்தில் ‘காவிய கங்கை’யையும், கவி குமுத சந்திரரையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக உறுத்தும் இரு கேள்விகள் இவை. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், அந்த மகா கவியைப் பற்றிய புது உண்மைகள் உலகுக்குத் தெரியலாம். கவித்துவத்தாலும், செல்வாக்கினாலும் உருவாகிய மாபெரும் கலாகேந்திரமாகிய காவிய கங்கையை உருவாக்கியவர் என்ற முறையில் இன்று உலகம் அவரைப் பற்றி அறிய, அதிக ஆவலுடன் காத்திருக்கிறது. அதிக மரியாதையோடும் எதிர்பார்த்திருக்கிறது.