பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

936

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்பதால் இரவு நெடு நேரம் கண் விழிக்க விரும்பாமல், உறங்கி விட்டேன் நான்.

காலையில் நான் கண் விழித்த போது கவி சிரேஷ்டரின் புகழ்பெற்ற உதய கீதம் மரஞ்செடி கொடிகளின் அடர்த்தியினிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. ‘கீழ்வானத்தில் குங்கும ரேகைகள் படர்கின்றன. கால தேவன் இன்னொரு புதிய கவிதையை எழுதத் தொடங்கி விட்டான். கேட்பதற்காக உங்கள் துயிலெழலை எதிர்பார்த்திருக்கின்றான். நீங்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே?’ என்பது போன்ற பொருளுடன் தொடங்கும் பாட்டு அது.

வேறு துணைக் கருவிகளே இல்லாமல் வீணை ஒலியுடன் பூபாளத்தில் ஒலித்த இந்த உதய கீதப் பாட்டுடனேதான் கவி சிரேஷ்டரின் 90வது ஜன்ம தினக் கொண்டாட்டம், ‘காவிய கங்கை’யில் தொடங்கியது என்று சொல்ல வேண்டும்.

நான் எழுந்திருந்து நீராடி, உடை மாற்றிக்கொண்டு தயாரானேன். காமிராவில் ஃபிலிம் அடைத்து, எதற்கும் சில சமயங்களில் தேவைப்படலாம் என்ற எண்ணத்துடன் ‘பிளாஷ்-அட்டாச்மெண்ட்’டைச் சரி செய்து கொண்டு புறப்பட்டேன். காவிய கங்கை திருவிழாக் கோலத்தில் பொலிந்தது. எங்கு பார்த்தாலும், அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. காவிய கங்கையின் நெசவுப் பகுதியில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற டிசைனுடன் கூடிய அழகிய வண்ணக் கைத்தறிப் புடவைகளை அணிந்து, கைகளில் தாமரை மலர்களுடன் பெண்கள் ‘கியூ’ வரிசையில் நின்றார்கள். கவி சிரேஷ்டரின் வாசஸ்தலமான குடிலை நோக்கி அந்தக் கியூ வரிசை நீண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆண்களின் வரிசையும் கைகளில் தாமரைப் பூக்களோடு காத்திருந்தது. அந்த இடத்திலும், அதன் சுற்றுப் புறங்களிலும் தாமரைப் பூக்களுக்குப் பஞ்சமேயில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தாமரைத் தடாகங்கள். எல்லாத் தடாகக் கரைகளிலும் தாமரைப் பூக்கள் கொய்து குவிக்கப்பட்டிருந்தன.

காபி, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நானும் கவி சிரேஷ்டரின் குடில் வாயிலில் போய்க் காத்திருந்தேன். எனக்கும் தாமரைப் பூக்கள் கிடைத்தன.

குடிலின் முன்புறம் சரியாக ஆறு மணியாவதற்கு ஐந்து நிமிஷம் இருக்கும் போது படுக்கை போல் தணிவான மெத்தை இணைத்த சாய்வு நாற்காலி ஒன்று கொண்டு வந்து போடப்பட்டது. அதையடுத்து ‘காவிய கங்கை’ வாசிகளான இரண்டு பெண்கள் ஆள் உயரக் குத்து விளக்குகள் இரண்டைப் பக்கத்திற்கு ஒன்றாகக் கொண்டு வந்து வைத்து ஏற்றினர். விளக்குகள் பளீரென்று துலக்கப்பட்டிருந்தன.

குடிலின் கடிகாரம் மணி ஆறு அடிப்பதற்கும், அதே பெண்கள் கைத்தாங்கலாக மெல்ல நடத்தி வந்து கவி சிரேஷ்டரை அந்தச் சாய்வு நாற்காலியில் அமரச் செய்வதற்கும் சரியாயிருந்தது. முதுமை காரணமாய்ச் சற்றே மலர்ந்து கசங்கிய ரோஜாப் பூ போன்ற சிவந்த முகம். அந்த முகத்தின் கீழ்ப் பகுதியை வெண் மேகம் போன்ற தாடி மறைத்தது. புருவங்களும், இமைகளும் இறங்கித் தொங்கித் தொய்ந்து