பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

941

“எல்லாம் சரி. ஆனால், ‘ஒளி திரும்பாத இரவு’ என்ற அந்த ஒரு கவிதையை எழுதாததற்காக இத்தனை ஆண்டுகளாக அந்த முதல் இடத்தைக் காலியாகவே விட வேண்டுமா?”

“தமக்குத் தொண்டு செய்து, தம்மைக் காப்பாற்றிய அந்த மலைப் பளிஞர் யுவதியின் ஞாபகத்துக்கு அவர் செய்யும் மரியாதை அது. அதில் குறுக்கிட நாம் யார்?”

“இன்னும் எழுதப்படாத ஒரு முதற் கவிதைக்காக இத்தனை ஆண்டுகள் தவமா?”

“தவம் என்றுதான் அவர் சொல்லுகிறார்! ஒரு ஜோடி கிரேளஞ்சப் பறவைகளில் ஒன்றின் மரணத்தால், மற்றொன்று தவித்து அழிய நேர்ந்ததைக் கண்டு மாறிக் கிராதக உள்ளத்தினனான வேடன் மகாகவி வால்மீகியானான். ஒவ்வொரு கவியும் பிறக்கிறான். பெளதீகப் பிறப்பு எடுத்த பின்னும் மறுபடி ஞானப் பிறப்பு எடுக்கிறான். இந்த ஞானப் பிறப்பே அவனது கவிதை வடிவம். கவி குமுத சந்திரரின் ஞானப் பிறப்புப் பல ஆண்டுகளுக்கு முன் வனாந்தரமாக இருந்த இந்தப் பிரதேசத்தில்தான் நேர்ந்தது. அவருடைய காவிய சரஸ்வதி இநதப் பளிஞர் குலப் பெண்தான். எழுதப் படிக்கத் தெரியாத இந்தச் சரஸ்வதியின் கடாட்சம்தான் அவரைக்கவியாக்கியது என்று அவரே நினைக்கிறார்.”

“நீங்கள் சொல்லுகிற இந்தக் கருத்துக்கள் எல்லாம் அவருடைய அங்கீகாரம் பெற்றவைதாமா?”

“இதில் அங்கீகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய சுய சரிதம் முதல் முறையாக இப்போது அச்சாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வெளி வந்து விடும். அதில் உள்ள விவரங்களைத்தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

“தயவு செய்து வெளிவரப் போகும் அந்தச் சுய சரித நூலின் பெயரைச் சொல்ல முடியுமா?”

“இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை.”

“அப்படி ஒரு சுயசரிதத்தை ஏன் இவ்வளவு கால தாமதமாக வெளியிடுகிறீர்கள்?”

“நாங்களாகச் செய்யவில்லை. கவி சிரேஷ்டரின் கட்டளை அப்படி.”

“என்ன கட்டளை அது?”

“நான் எந்த வருடம் பேசுவதை அறவே நிறுத்தி, மெளனத்தில் நிறைந்து விடுகிறேனோ அந்த வருடம் இதை அச்சிட்டு வெளியிடவும் என்று அவரே இந்தச் சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியின் முதற்பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு இது வெளிவர இருக்கிறது. அவருடைய பிற காவியங்களுக்கு இணையாக இந்தச் சுயசரிதை எழுதப்பட்டிருக்கிறது.”

எங்கள் பேட்டி முடிந்தது. பொது உறவு அதிகாரி எனக்கு விடையளித்து அனுப்பத் தயாரானார். நான் அந்த மலைப் பளிஞர் யுவதியின் ஆயில்