பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

942

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பெயிண்ட்டிங்கை ‘குளோஸ் அப்’பாக ஒரு படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டுப் படம் எடுத்துக் கொண்டேன். கவி சிரேஷ்டர் குமுத சந்திரரை அவரது குடிலில் சென்று மெளன விரதத்துக்குப் பங்கமின்றி ஒரு முறை தரிசிக்கவும் படமெடுக்கவும் வேண்டினேன். பொது உறவு அதிகாரியே அழைத்துச் சென்றார். தளர்ந்த ரோஜா மேனியின் காட்சி கிடைத்தது. ‘காவிய கங்கை’யில் நான் பெற்ற அனுபவம் மெய் சிலிர்க்கச் செய்வதாக இருந்தது. அச்சாகிக் கொண்டிருந்த ‘இன்னும் எழுதப் படாத கவிதை’ புத்தகத்தின் பகுதிகள் சிலவற்றைப் பொது உறவு அதிகாரி எனக்குக் காட்டினார்.

அப்புத்தகத்தில் கவி குமுத சந்திரரின் வாக்கியங்களிலிருந்து என் நினைவில் நீங்காமல் நின்றவை பல.

“ஒவ்வொரு கவியும் ஒரு முயற்சிதான். தான் எழுத வேண்டிய ஒரு பரிபூரணமான கவிதைக்காக ஓராயிரம் சாதாரணக் கவிதைகளை அவன் எழுத முயல்கிறான். சிலருடைய வாழ்க்கை முயற்சியிலேயே முடிந்து விடுகிறது. இன்னும் சிலருடைய வாழ்க்கை முயற்சிக்கு முன்பேயும் முடிந்து விடுகிறது.

நானோ பல்லாயிரம் பரிபூரணமான கவிதைகளை எழுதி விட்டேன். ஆனால், எங்கே எந்த வினாடியில் எந்தச் சோகத்தால் நான் கவிஞன் ஆனேனோ, அதை மட்டும் இன்னும் என்னால் எழுத முடியவில்லை. எழுத வரவில்லை. தசரதன் இராமனைக் காட்டுக்கு அனுப்பிப் பிரிந்த சோகத்தை ஊனுருகப் பாடிய கம்பன் தன் சொந்த மகன் அம்பிகாபதியின் சாவுக்கு இரங்கி, அப்படி ஒரு சிறு பாட்டுக் கூடப் பாட முடியாமல் போனது போலத்தான். என்னைப் பாட வைத்தவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். அவளுக்குத் தெரிந்த மலைப் பளிஞர் மொழி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த தமிழோ, ஆங்கிலமோ அவளுக்குத் தெரியாது. ஆனால், அவள் வார்த்த கஞ்சி, அவள் பார்த்த பார்வை, அவள் சிரித்த சிரிப்பு எல்லாம் சேர்ந்துதான் என்னைக் கவியாக்கின. மகா கவியாக்கின. ‘காவிய கங்கை’யை ஸ்தாபிக்கச் செய்தன. அவளும், நானும் சந்தித்துக் கொண்ட அந்த வனாந்தரமும் ,பாழ் மண்டபமும் இருந்த அதே பகுதியை வாங்கிக் கலாகேந்திரம் அமைக்குமளவு நான் பெரிய செயல்களைச் செய்ய முடிந்தது. ஓர் அஞ்ஞானியால் நான் ஞானியானேன். அந்த மகத்தான அஞ்ஞானியைச் சித்திரித்துப் பாடமுடியாத முறையின்போது மறுபடி நானும் ஞானஹீனப்பட்டு நிற்பது போல் உணர்வைத் தவிர வேறென்ன செய்வது?”

இவை அவரது சுயசரிதத்தில் நான் படித்தவை.

அந்தச் சுயசரிதமும் இன்னும் முடிக்கப்படாத ஒரு சுயசரிதமாகவே இருந்தது. ஆனால், மிக அருமையான கவிதை நடையில் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அந்தச் சுயசரிதத்துக்கு அவர் சூட்டியிருந்த பெயரின் பொருட்கனிவைத் தான் மீண்டும் நினைத்து நினைத்து வியந்தேன் நான்.

(1978-க்கு முன்)