பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

944

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எல்லாரும் நம்பினார்கள். தவிர முனிவேலன் கவுன்சிலர் பதவியை வைத்து நிறைய பணம் பண்ணி விட்டதாக ஒரு கெட்ட பெயர் இருந்ததால், அவனுக்கு இந்தத் தடவை ஓட்டு விழாது என்றும் பேசிக் கொண்டார்கள்.அது ஒரளவு உண்மையாகவும் இருந்தது.

முதலியார் தேர்தலுக்காக நிறையவே செலவு செய்தார். அவருடைய பங்களாவுக்குப் பின்னால் ஒரு பெரிய குடிசைப் பகுதி. அதில் மட்டும் மொத்தம் ஆறாயிரம் ஓட்டு இருந்தது. அவ்வளவும் அவருக்குத்தான் விழும் என்று நம்ப முடிந்த ஓட்டுக்கள். மற்ற இடங்களிலும் நிலைமை சாதகமாகவே இருப்பதாய்த் தெரிந்தது. ஒரு கெட்டவனை எதிர்த்து நல்லவர் ஜெயிக்க வேண்டியது நியாயமாகவும் இருந்தது. முதலியார் தோற்கக் காரணமே இல்லை என்பதும், முதலியாரை எதிர்க்கும் முனிவேலன் ஜெயிக்கக் காரணமே இல்லை என்பதும் தெளிவாகத் தெரியத் தொடங்கி விட்டன. முதலியாருடைய ஒழுக்கமும், தர்ம சிந்தையும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றாகி விட்டது. இருந்த போதிலும், நம்பிக்கை போய் விடாமல் முனிவேலனும் அலைந்து கொண்டிருந்தான். அதிகம் செலவு செய்யாமல் சும்மா அலைந்து கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன் முதலியாரும், முனிவேலனும் தற்செயலாக ஒரு தெருவில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.அவன் அவருக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டான். தோல்வி அடையப் போகிறவனுடைய கும்பிடு மாதிரித் தெரியவில்லை அது. பேச்சும் சிரிப்புமாக இருவரும் எதிரிகள் போல் அன்றி, நண்பர்கள் போலவே சந்தித்துக் கொண்டார்கள். திடீரென்று சிரித்துக் கொண்டே முதலியாருக்கு ஒரு சவால் விடத் தொடங்கினான் முனிவேலன்.

“முதலியாரே! நீங்க ஜெயிக்க மாட்டீங்க... பாவம்! அநாவசியமாப் பணத்தைத் தண்ணியாச் செலவு செய்யறீங்க ரெண்டு கலர்லே ஆயிரக் கணக்கான போஸ்டர் ஒட்டியிருக்கீங்க. நான் போஸ்டரே ஒட்டலை, ஆனா ஒங்களோட ஆயிரக் கணக்கான போஸ்டரினாலே விளையற லாபத்தை, ஒரே ஒரு சின்ன போர்டு எழுதி வச்சு நான் தட்டிக்கிட்டுப் போயிட முடியும்.”

“முடிஞ்சா செய்யேன்! உன்னைப் போலப் பணம் பறிக்கிற ஆள் இனிமே இந்தத் தொகுதியிலே ஜெயிக்கலாம்னு கனவுகூடக் காணமுடியாது.”

“யார் சொன்னாங்க அப்பிடி? என்னைப் போல இருக்கறவங்கதான் வர முடியும். வந்துக்கிட்டும் இருக்காங்க. உம்மைப் போல நல்லவனா இருக்கறவங்க வேணா வர முடியாமப் போகலாம். இப்ப நான் சொல்றதை அப்பிடியே எழுதி வச்சிக்குங்க முதலியாரே! நான்தான் ஜெயிக்கிறேன். நீர் தோற்கிறீரு…”

“பார்க்கலாமே…”

முதலியாருக்குச் சிரிப்புத்தான் வந்தது. முனிவேலனின் ‘மனோபொலி'யை உடைக்கவே அந்தத் தடவை அவர் போட்டியிட்டார். இப்போது அவன் ஜம்பம் பேசியது வேறு, அவர் ஆத்திரத்தை அதிகமாகக் கிளறிவிட்டது.