பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இது பொது வழி அல்ல

945

பங்களாவுக்குப் பின்புறமுள்ள குடிசைப் பகுதி ஓட்டு ஆறாயிரமும் யாருக்குக் கிடைக்குமோ அவர்கள் தான் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும் என்பது ஊரறிந்த உண்மை. அந்த ஆறாயிரம் ஓட்டும் தமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை முதலியாருக்கு வந்து விட்டது. முனிவேலன், ‘ஒரே ஒரு போர்டு எழுதி வைத்து அவ்வளவு ஓட்டையும் தன் பக்கம் திருப்பி விட முடியும்’ என்று ஏதோ சொல்லி விட்டுப் போனானே, அதுதான் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. புரியாததற்காக அவர் கவலைப்படவும் இல்லை. அவருடைய பங்களா இருந்த அதே வரிசையில் தென் கோடியில் மெயின் ரோட்டையும் குடிசைப் பகுதியையும் இணைக்கும் காலி மனை ஒன்றிருந்தது. அந்த மனை முதலியாருக்குச் சொந்தமானது. அதன் வழியாகத்தான் குடிசைப் பகுதிக்குள் போகவும், வரவும் பாதை ஏற்பட்டிருந்தது. முதலியார் தம்முடைய அந்தக் காலி மனையை ஒரு முள் வேலி எடுத்துத் தடுத்திருந்தால், குடிசைப் பகுதியினர் இரண்டு பர்லாங் தூரம் சுற்று வழியாக நடந்துதான் மெயின் ரோடுக்கு வரவும், போகவும் நேரிடும். குடிசைப் பகுதியினரின் நன்மையை உத்தேசித்து அவர் அந்த மனைக்கு வேலியெடுக்காமல் விட்டிருந்தார். தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன் அந்தக் காலி மனையில் மாபெரும் பந்தல் போட்டு ஏழைகளுக்கு உணவும், பெண்களுக்கு ரவிக்கைத் துண்டு, மஞ்சள்கிழங்கும், குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்கு சிலேட்டு பென்ஸிலும் வழங்க ஏற்பாடு செய்த போது கூட ‘ஸ்லம் ஓட்டு முழுவதும் தமக்கே’ என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார் முதலியார். ஜனங்கள் அவரிடம் அவ்வளவு விசுவாசமாயிருந்தார்கள். ‘இந்த விசுவாசத்தை முனிவேலனோ, இன்னொருவரோ அவ்வளவு சுலபமாக மாற்றி விட முடியாதே? ஒரு நல்லவனைத் தோற்கச் செய்வதென்பது அவ்வளவு எளிதாக நடந்து விட முடியாதே? முனிவேலன் கை நிறைய வாங்கி, வாங்கியே பங்களாவும், டாக்ஸிகளுமாகப் பணக்காரனாகி விட்டான். அவனுக்கு ஓட்டுப் போட்டவர்கள் லாபமடையவில்லை. அவன் லாபமடைந்து விட்டான். என்னைப் போல் பரம்பரையாக வசதியுள்ளவன் ஜெயித்தால் ஜனங்களிடம் கை நீட்டி வாங்கும் ஈனத்தனமான காரியத்தைச் செய்து விடப் போவதில்லை. பரம்பரைப் பண்பாடே கையை நீள விடாமல் தடுக்கும்’ என்று பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் முதலியார். வெற்றியைப் பற்றி அவருக்கு எள்ளளவு சந்தேகமும் கூட இருக்கவில்லை.

ஒரு வழியாகத் தேர்தல் நாள் நெருங்கியது. காலி மனையில் போட்ட பந்தல், சாப்பாடு, இரவிக்கைத் துண்டு - சிலேட் பென்ஸில் வகையிலேயே பதினையாயிரம் ரூபாய்க்கு மேல் முதலியாருக்குச் செலவாகி விட்டது.பந்தலைப் பிரித்து விட்டுச் சற்று முன்புதான் காண்ட்ராக்டர் கணக்குப் பார்த்துப் பணம் வாங்கிக் கொண்டு போனான். அவருடைய சொத்துக்கு இது ஒரு செலவே இல்லை.

முதலியார் பக்திமான். காந்தியடிகள் மேல் அபார நம்பிக்கை கொண்டவர். புத்தரைப் போல், சங்கரரைப் போல் காந்தியடிகளையும் அவதாரமாக மதிக்கிறவர். தேர்தலுக்காகச் செலவு செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், முனிவேலனின் லஞ்ச ஏகாதிபத்தியத்திலிருந்து அப்பாவி ஏழை ஜனங்களை எப்படியும் விடுவிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் செலவும் செய்துவிடத்
நா.பா. 11 - 21