பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh}946||நா. பார்த்தசாரதி சிறுகதைகள்}}

துணிந்தார். முனிவேலன் ரொம்பவும் சிக்கனமாக இருந்த அதே சமயத்தில், செலவு செய்வதால் தம் சொத்துக் கரைந்து போகுமே என்றும் அவர் வருந்தவில்லை. ‘ஜனங்களைப் பணத்தினால் மருட்டுவது பாவம்’- என்று கருதியே அவர் நாணினார். கஞ்சத்தனம் அவர் குடும்பத்துக்கே தெரியாத வார்த்தை. பல ஊர்க் கோவில்களில் ‘கருணாகர முதலியார் கட்டளை’ என்று அவர் தாத்தா ஏற்படுத்திய கட்டளைகளும், தந்தையார் செய்தளித்த வெள்ளித் தேர்களும் இன்னும் நடை பெற்றுப் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாமே கொடுத்துக் கொடுத்து வளர்ந்தவையே தவிரக் கொடுக்காததனால் தேங்கியவையல்ல. முனிவேலனின் புதுப்பணம் வாங்கி வாங்கிச் சேர்த்தது என்றால் முதலியாரின் பரம்பரைப் பணம் கொடுத்துக் கொடுத்து வளர்ந்ததாகும். வாங்கிச் சேர்த்த சொத்துக்கும் கொடுத்துப் பெருகிய சொத்துக்கும் எவ்வளவு வித்தியாசமிருந்தது?

தேர்தல் நாள் வந்தது. முதலியாருக்காக அறுபது கார்கள், இருபது டாக்ஸிகள், பல ரிக்‌ஷாக்கள் எல்லாம் வேலை செய்தன. முதலியார் வெளியே போய்த் தாம் ஓட்டுப் போட்டது தவிர எங்கும் அலையவில்லை. நம்பிக்கையோடு வீட்டிலேயே இருந்து விட்டார். முனிவேலனுக்காக அதிகம் ஆட்களோ, வாகனங்களோ வேலை செய்யவில்லை. முதலியாரின் ஆட்கள் பம்பரமாய் அலைந்தனர்.

மாலை நாலே முக்கால் மணிக்குப் ‘போலிங்’ முடிவதற்கு ஓர் அரை மணியோ, கால் மணியோ, இருக்கும் போது முதலியாருடைய தம்பி மகன் அவசரமாய் ஓடி வந்து பரபரப்பாக ஒரு செய்தியைச் சொன்னான் :

“ஏன் பெரியப்பா இப்படிப் பண்ணினீங்க? அவ்வளவு காரியத்தையும் தலை கீழாக்கிக் கெடுத்துப் புட்டீங்களே? ராத்திரியோட ராத்திரியா அந்த வேலியைப் போட்டு, போர்டு மாட்டாட்டி இப்ப என்ன குடி முழுகிப்பிடும்னு அப்பிடிப் பண்ணினீங்க?”

முதலியாருக்கு அவன் என்ன கேட்கிறான் என்பதே முதலில் புரியவில்லை. திகைத்தார்.

“நீ என்ன சொல்றே! என்ன வேலி? என்ன போர்டு?”

“செய்யறதையும் செஞ்சுப்பிட்டு உடனே மறந்துட்டீங்களா? வாங்க என்னோட புரியும்படியாக் காண்பிக்கிறேன்” என்று அவரைத் தன்னோடு கூப்பிட்டான் தம்பி மகன். அவர் அவனோடு உடனே விரைந்தார்.

தெருவின் தென்கோடியில் இருந்த அவருக்குச் சொந்தமான காலி மனையைச் சுற்றி சவுக்குக் கட்டை நட்ட இரும்புமுள் கம்பியால் முற்றாக அடைத்திருந்தது.

‘ப்ராப்பர்ட்டி ஆஃப் கண்ணப்ப முதலியார். இது பொது வழி அல்ல. மீறி நடப்பவர்கள் போலீசார் வசம் ஒப்புவித்துத் தண்டிக்கப்படுவார்கள்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பெரிதாக ஒரு போர்டும் எல்லார் பார்வையிலும் படும்படியாக அந்த வேலியில் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது.