பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இது பொது வழி அல்ல

947

“இது யார் செய்த வேலை?” - என்று கோபமாகத் தம்பி மகனைப் பார்த்து இரைந்தார் கண்ணப்ப முதலியார்.

“என்னைக் கேட்டா எப்பிடி? எனக்கென்ன தெரியும்? நானே இப்பத்தானே பார்த்தேன். நீங்கதான் எழுதி வச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன்”-என்றான் அவன். கோபத்தோடு போர்டைக் கழற்றி எறிந்து விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார் முதலியார். மணி மாலை ஐந்து இருபத்தைந்து. போலிங் முடிந்து ஓட்டுப் பெட்டிகளை மூடிச் சீல் வைத்துக் கொண்டிருப்பார்கள். இனி ஒன்றுமே செய்ய முடியாது.

“ஓட்டுச் சாவடிக்குக் கூப்பிட்டப்பவே, ஸ்லம் ஆட்களில் சிலர் நம் தொண்டர்களைக் காரணமின்றி முறைத்தார்கள். காலையிலேருந்தே இப்படி நடந்தது. சிறிது நேரத்திற்கு முன் ஒருத்தனை ஓட்டுச் சாவடிக்குக் கூப்பிட்டப்ப “போய்யா முதல்லே போய் இன்னும் பெரிசா வேலி போட்டு வழியை அடை. நிறைய ஓட்டு விழும்” என்று அவன் பரிகாசமாகச் சொன்ன போதுதான் நானே இங்கே வந்து பார்த்து விட்டு உங்களிடம் ஓடி வந்தேன்” என்றான் முதலியாரின் தம்பி மகன்.

முதலியாருக்குப் புரிந்தது. ‘ஒரே ஒரு போர்டு எழுதி வச்சு உங்களை ஜெயிக்கிறேனா இல்லியா பாருங்க’ என்று முனிவேலன் அன்று தன்னிடம் சவால் விட்டது நினைவுக்கு வந்தது அவருக்கு அவசர அவசரமாக வீடு திரும்பி வக்கீலுக்கு ஃபோன் செய்தார் முதலியார்.

“இப்படி இரவோடு இரவாக ஒரு சதிபண்ணி அத்தனை ஜனங்களும் நான்தான் வேலி போட்டதாக நம்பச் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டான். இதற்குக் ‘கேஸ்’ போடணும்.”

“கேஸ் போடறது சரி! முனிவேலன்தான் இதைச் செய்தான்கிறத்துக்குச் சரியான ஃப்ரூப் வேணுமே? அப்படி ஏதாவது இருக்கா? ‘போலிங்’ முடிஞ்சு பெட்டியை சீல் வச்சப்பறம் நீர் இனிமே என்ன பண்ணப் போறீர்? காலையிலேயே பார்த்திருந்தாலும் எலெக்‌ஷன் கமிஷனருக்குப் புகார் பண்ணியிருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி இப்ப என்ன பண்ண முடியும்?” என்றார் வக்கீல்.

அவர் சொல்வதில் தவறில்லை என்று பட்டது முதலியாருக்கு. தன்னிடமிருந்து எவ்வளவோ நன்மைகளை அடைந்திருந்தும், ஒரு சின்னக் குழப்பத்தில் குழம்பி விட்ட ஜனங்களின் அந்தத் திடீர் மாறுதலைதான் அவரால் நம்பவே முடியவில்லை. ப்ளாஸ்டிக் யுகத்தில் மக்களின் விசுவாசம் கூடச் சுலபமாக உடைய முடியும் போலிருந்தது; முப்பது வருஷமாகப் புரிந்து கொண்டிருந்த தம் நல்லெண்ணத்தையும், தர்ம சிந்தனையையும் ஒரே ஒரு போர்டு எழுதி வைத்து இரவோடு இரவாகக் கெடுத்தவனுடைய குறுக்கு வழி சாமர்த்தியம்தான் இன்றைய அரசியலுக்குத் தேவை போலிருக்கிறது. இன்றைய அரசியலில் ஒரு நல்லவன் ஜெயித்தான் என்பதுதான் ஆச்சரியமாக இருக்குமே ஒழியத் தோற்றான் என்பது ஆச்சரியமாக இராதென்றே தோன்றியது. ஒரு நல்லவன் நிச்சயமாகத் தோற்கத்தான் முடியும் என்ற ஆரோக்கியமற்ற