பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

948

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அரசியல் களத்தில் அவர் நுழைந்திருக்கக் கூடாதுதான். நுழைந்ததற்குப் பயன் கை மேல் கிடைத்தது.

மறுநாள் மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முனிவேலன் ஐயாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவரை ஜெயித்தான்.

அந்த வாரக் கடைசியில் தம்பி மகனைக் கூப்பிட்டுக் கீழ்க்கண்ட உத்தரவைக் கண்டிப்பாகப் பிறப்பித்தார் முதலியார்.

“நம்ம காலி மனையைச் சுற்றி நாலு பக்கமும் பெரிசாச் சுவரெடுத்து, நாலு பக்கமுமே ‘பிராபர்ட்டி ஆஃப் கண்ணப்ப முதலியார். இது பொது வழி அல்ல. மீறிப் பிரவேசிப்பவர்கள் கண்டிப்பாகப் போலீசார் வசம் ஒப்புவித்து தண்டிக்கப்படுவார்கள். டிரஸ் பாஸர்ஸ் வில் பீ பிராஸிகியூடட்’ என்று எழுதிடணும்.”

“அதான் வேலியும், போர்டும் ஏற்கனவே இருக்கே?”

“அந்த வேலியும், போர்டும் முனிவேலன் போட்டது. அதைப் பிரிச்சி அவன் வீட்டிலேயே கொண்டு போய்ப் போட்டுடு. ஊர் சொத்து நமக்கு வேணாம். இப்ப நாமே நமக்காகச் சுவரெடுக்கணும்.”

“ஜனங்க மனசு சங்கடப்படுமேன்னுதான் பார்க்கிறேன்?”

“நான் அப்படி முப்பது வருசமாப் பாத்தாச்சு; அதுக்கு எந்த விசுவாசமும் பதிலாகக் கிடைக்கலே, நான் வியாபாரி. லாபம் தராத ‘இன்வெஸ்மென்ட்’ இனிமே எதுக்கு?”

முதலியாரின் தம்பி மகன் பதில் பேசவில்லை. சுவரெடுக்க செங்கல் வருவதற்காக பிரிக் ஒர்க்ஸுக்கு ஃபோன் செய்யப் போனான். கண்ணப்ப முதலியார் புத்தக அலமாரியிலிருந்து தேவாரப் புத்தகத்தை எடுத்தார்.

(1978-க்கு முன்)