பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129. இரண்டாவது விமர்சகன்

னக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி முடிவில் அந்தப் பொய்களும் அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப் புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டி விட்டது. உணர்வினால் வாழ முடியாத உயரத்துக்குத் தங்களையே உயர்த்திக் கொண்டு விட்டவர்களுக்கு இப்படி ஒரு சலிப்பு வருவதும் இயற்கைதான். தனி அறிவினால் மட்டுமே வாழ்ந்தால் - உணர்வின் ஈரப்பசையில்லாத அந்த அறிவு வாழ்க்கை ஒரு நாள் காய்ந்து முறிந்து போகுமென்று தோன்றியது. திருவாளர் பொன்னப்பாவும் அப்படிக் காய்ந்து முறிந்து போகிற ஒரு நிலையில்தான் இருந்தார். இப்போது அவரை யாரும் கவனிப்பாரில்லை. அவருடைய அபிப்பிராயங்களையும் யாரும் இலட்சியம் செய்வதில்லை. சமுதாய வளர்ச்சி என்ற பாதையில் கருத்துக்கள் வளராமலும், மனம் விரிவடையாமலும் - முடமாகிப் போன சிந்தனையாளனைப் போல் பின் தங்கி விட்டார் அவர். பரந்த சிந்தனையும், மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற பொது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக, இப்போது அவர் விமர்சகர் ஆகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழி தீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன. தான் சொல்கிற ஒரு கருத்து அல்லது அபிப்ராயம் நியாயமா, தனக்கே மனப்பூர்வமானதா என்று சிந்தித்துச் செயற்படுவதை விடத் தான் சொல்கிற கருத்து அல்லது அபிப்ராயத்தை மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்று சிந்தித்துச் செயல்படும் தாழ்வு மனப்பான்மை அவருக்கு வந்து விட்டது. தன் அபிப்ராயத்தால் பலரும் உடனே பாதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஒரு வக்கிர குணமும் அவருக்கு வந்திருந்தது. எதைப் பற்றி எழுதினாலும் தீவிரமாகத் தாக்கி எழுத வேண்டும் என்ற வெறியும் அவரிடம் முறுக்கேறியிருந்தது. சராசரியான நல்ல அறிவாளி ஒருவனுக்குச் சமூகத்தையும், மற்றவர்களையும் பொறுத்து இருக்க வேண்டிய குறைந்த பட்சமான சுமுக பாவமும் இல்லாமல் வறண்டு போயிருந்தார் அவர். அப்பாவித் தமிழ்ப் பண்டிதர்கள் மேலும், புதிதாக முன்னேறும் இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் மேலும் அக்கினித் திராவகத்தை வாரி இறைப்பது அவருடைய பேனாவின் மரபாகி விட்டது. பி.சு. பொன்னப்பா - என்பது அவருடைய முழுப் பெயராக இருந்தாலும் ஓர் இலக்கிய அரக்கனுக்காகப் பயப்படும்-பயங்கலந்த நிர்ப்பந்த மரியாதையோடு’பி.எஸ்.பி.’ என்று அன்பர்கள் மெதுவான குரலில் அவர் பெயரைச் சொல்லி வந்தார்கள்.