பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————இரண்டாம் தொகுதி/இரண்டாவது விமர்சகன் 🞸 951

மட்டும் நிறைவேறியது.காரசாரமான அபிப்பிராயங்களோடு கடுமையான விமர்சனப் பத்திரிகை ஒன்று நடத்தவேண்டுமென்ற ஆசை அவருக்கு நீண்டகாலமாய் இருந்தது. பத்திரிகைக்கு ‘இலக்கிய ராட்சஸன்’ - என்று பெயர் வைத்தார். பத்திரிகையின் இலட்சியங்கள் பின் வருமாறு வெளியிடப்பட்டிருந்தன:

1. இந்தப் பத்திரிகைக்கு முந்நூறு வாசகர்கள் போதும். 2. தமிழ்ப் பண்டிதர்கள், மரபு வழிக் கவிதை எழுதுவோர் ஆகியவர்கள் இந்தப்

பத்திரிகையைப் படிக்கக் கூடாது.

3. இந்தப் பத்திரிகை கடைகளில் தொங்காது. 4. எல்லாப் பத்திரிகைகளும் அட்டையில் இளம் பெண்கள் படத்தைப் போடுவது ::போலல்லாமல் இந்தப் பத்திரிகையில் கிழவிகள் கிழவர்கள் படமே போடப்படும்; ::இளம் பெண்கள்போல் தோன்றும் கிழவிகள் படம் கூடப் போடப்பட மாட்டாது. 5. இந்தப் பத்திரிகையில் சோதனைகளுக்கே முதலிடம் உண்டு.

இத்யாதி நிபந்தனைகளுடன் பத்திரிகை வெளி வந்தது. முதல் இதழில் முதல் பக்கத்தில் பி.எஸ்.பி. எழுதிய புதுமுறை வசன கவிதை ஒன்று வெளி வந்திருந்தது. அக்கவிதை பின் வருமாறு.

விளக்கெண்ணெயின் ‘வழ வழ’
ஜிலு ஜிலுக்கும் விளக்கெண்ணெய்
சிவு சிவு பிசுபிசு-
சிவு-சிவு வழவழ
வழவழ கொழ கொழ கொழ
கொழ விளக்கெண்ணெய்
கரு கரு மயிர்க் கும்பல்
கருத்தடரும் உயிர்க்காடு" -

இக்கவிதையில் மனத்தினால் எட்டிப் பிடிக்க முடியாத பல அரிய உண்மைகள் அடங்கியிருக்கும் மர்மங்களை இதைப் படைத்த கவிஞராகிய பி.எஸ்.பி. அவர்களே அதே இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். துர்த்தேவதைகளுக்கும் பக்தர்கள் ஏற்படுவது போல் பி.எஸ்.பி.யின் இலக்கிய ராட்சஸனுக்கென்று சில வக்கிரமான வாசகர்களும் உக்கிரமான மூளைக்கொதிப்படைந்த பக்தர்களும் கிடைத்தனர். ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாட்டை அலசும் ஒரே ஏடு என்று பீடு மொழியுடன் இலக்கிய ராட்சஸன் பவனி வரத் தொடங்கினான். இலக்கிய ராட்சஸனின் 250 பிரதிகள் தமிழ்நாட்டை அலசின.

‘எஸ்ராபவுண்டின் கவிகளும் எழுத்தச்சனும்,’ ‘உருஉத்திப் பார்வையும் கரு அமைந்த கதைகளும்,’ ‘முட்டைக்கடை முகுந்தன் கவிதை நூல் விமர்சனம்’ ‘காஃப்காவும் கருணைக் கிழங்கு லேகியமும்’ போன்ற சில மூளைக்குழப்பத் தலைப்புக்கள் இலக்கிய ராட்சஸனில் அடிக்கடி தென்படலாயின.