பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

952 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

இலக்கிய ராட்சஸனில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு வருவதைப் போல் பி.எஸ்.பி. யின் உயிரற்ற தமிழ்நடை வக்கிரத் தாக்குதல்கள் எல்லாம் ஏகலைவன் நியாயமாகக் கைவந்தன. அதில் மர்ம-பலராமன் என்றொரு இளைஞர் அடிக்கடி வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இலக்கிய ராட்சஸன் ஆசிரியன் கூட இந்த மர்ம - பலராமனின் குழப்பக் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டி வந்தார். மர்மபலராமன் எழுதாமல் ஒர் இலக்கிய ராட்சஸன் ஏடு கூட வராது என்ற அளவிற்கு ஒரு பிணைப்பு இருவருக்கும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் ஒருநாள் இலக்கிய ராட்சஸன் ஆசிரியர் பி.எஸ்.பியைச் சந்திக்க மர்ம - பலராமன் வந்து சேர்ந்தார். பி.எஸ்.பி. மர்ம பலராமனை உற்சாகமாக வரவேற்றார். “உங்க அபிப்பராயங்கள் எழுத்துக்களிலே முப்பதுகளுக்கு முந்தியதைப் பாராட்டியும் - இருபதுகளுக்குப் பிந்தியதைத் தாக்கியும் காரசாரமாக எழுதுறீங்க. ரொம்ப அழுத்தமும் இருக்கு-ஆழமும் இருக்கு” என்று இருபத்தேழு வயது நிரம்பாத மர்ம பலராமனைப் பாராட்டினார் பி.எஸ்.பி. மர்ம பலராமனுக்கு உற்சாகம் அதிகமாகி விட்டது. “கம்பனைக் குப்பையிலே போடு” என்றொரு திறனாய்வு எழுதியிருப்பதாக உடனே பி.எஸ்.பி.யிடம் கூறினார் மர்ம பலராமன். “ஆகா! தாராளமாக வெளியிடலாம்” என்று அதை வாங்கிக்கொண்டார்.பி.எஸ்.பி. மர்ம பலராமனுக்குத் துணிவு குடம் குடமாகப் பொங்கலாயிற்று.

விமர்சகர் பி.எஸ்.பி.‘விவாகரத்து’ என்று ஒருநாவல் எப்போதோ எழுதியிருந்தார். ஒரு விதவை மாமி மாவரைப்பதில் ஆரம்பமாகிற நாவல், அந்த மாமி மாவரைத்து முடிகிறவரை நூறுபக்கம் நினைவோட்டமாக வளர்கிற பாணி. அந்த நாவலை ‘தமிழிலக்கியத்தில் வெளிவந்துள்ள யதார்த்த இலக்கிய சிகரம்’ என்பதாக வர்ணித்து மர்ம பலராமன் இலக்கிய ராட்சஸ்னிலேயே ஒரு கட்டுரை எழுதினார். அதுவும் இலக்கிய ராட்சஸனில் அபாரமாக வெளிவந்தது.பி.எஸ்.பி. எதாவது ஸெமினார்கள், இலக்கிய அரங்குகளில் பேசினால் கூடத் தமிழ் இலக்கியத்தில் பிதாமகர்களாகக் குறிப்பிடும் பத்துப் பேர் மர்ம - பலராமனைப் போல் இலக்கிய ராட்சஸனில் வக்கிரக் கட்டுரைகளைப் படைப்பவர்களாகத்தான் இருப்பார்கள். மர்ம பலராமனை பி.எஸ்.பி. உற்சாகப்படுத்த அவர் சிறுபிள்ளைத்தனமாக எழுதுவதில் கடைசி எல்லைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

ஒருநாள் திடீரென்று மர்ம-பலராமனிடமிருந்துவந்த ஒரு கட்டுரையைப் படித்து பி.எஸ்.பி. திடுக்கிட்டார். ஏனென்றால் “பி.எஸ்.பி.யின் சமீபகாலத்து நாவலான ‘அடுப்பங்கரையில்’ ஆழமோ - பாத்திரங்களின் வார்ப்படமோ - சரியாக இல்லை என்றும் பி.எஸ்.பி. இனிமேல் நாவலே எழுதக்கூடாது” என்றும் மர்ம பலராமன் தனக்குத் துரோணர் போன்ற பி.எஸ்.பி. யையே கடுமையாகத் தாக்கியிருந்தார். ‘இந்த இருபத்தேழு வயதுப்பயலுக்குத் தாக்குகிறதுணிவு வருவதாவது?’ என்று திகைத்துச் சீறினார்.பி.எஸ்.பி.பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமானாக இருந்தார் அவர் இப்போது, மர்ம பலராமனிடம் பெருகிய துணிவுவெள்ளம் பி.எஸ்பியினது சமீப நாவல் வெறும் குப்பை என்று அடித்துச் சொல்கிற அளவு முறுகி வளர்ந்திருந்தது.