பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

956 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

“இப்போது தேசிய ஒருமைப்பாட்டு விழாவைப் பற்றிப் பேசுகிறோமா? அல்லது சித்தாந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறோமா? என்பது எனக்குத் தெரியவேண்டும்” என்று எழுந்திருந்து கூப்பாடு போட்டார். “பிற்போக்குவாதிகளுக்குச் சித்தாந்தப் போராட்டம் பற்றிக் கேட்டாலே பயம் வந்து விடுகிறதே?” என்று வலது, இடது தோழர்கள் இருவருமே ஒன்றாக எழுந்து சுதந்திரா உறுப்பினர்மேல் பாய்ந்தனர். தலைவர் குறுக்கிட்டுச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

“அமைதி அமைதி வீணான அரசியல் சர்ச்சைகள் இங்கு வேண்டாம். நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிய விழா இது. அதற்கான யோசனைகளை மட்டுமே இங்கு கூற வேண்டும். தி.மு.க. உறுப்பினர் திருமாவளவன் கூறிய அருமையான யோசனை எனக்கும் பிடித்திருக்கிறது. ஒருமைப்பாட்டு ஊர்வலத்தை எங்கிருந்து தொடங்கலாம்?”

“மறவர் தெரு முக்கிலிருந்து ஊர்வலத்தை ஆரம்பிக்கலாம்” - என்றார் முக்குலத்தோர் பிரதிநிதி முருகையாத்தேவர். உடனே முஸ்லிம் லீக் பிரதிநிதி வஹ்ஹாப் சாகிப்தாடியை உருவிக்கொண்டே எழுந்து நின்று,"இந்தப் பஞ்சாயத்தில் எந்த நல்ல காரியத்திலும் முஸ்லீம் பெருமக்கள் புறக்கணிக்கப்படுவதையே நான் தொடர்ந்து காண்கிறேன். ஊர்வலத்தை மறவர் தெரு முக்கிலிருந்து ஏன் தொடங்க வேண்டும்? காஜியார் தெரு பள்ளிவாசல் முன்பிருந்து ஏன் தொடங்கக்கூடாது?” என்பதாக இரைந்தார்.

“இவை எல்லாவற்றையும் விடப் பெருமாள் கோவில் முன்னாலிருந்து தொடங்குவதுதான் பொருத்தம்” - என்றார். ஜனசங்கப் பிரதிநிதி சக்ரபாணி அய்யங்கார்.

"ஏன் இத்தனை வம்பு தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஊர் நடுத் தெருவிலிருக்கிறதே! அங்கிருந்தே ஊர்வலத்தைத் தொடங்கலாமே?” என்று சேர்மன் மெதுவாக ஆரம்பித்தபோது "கூடாது! கூடவே கூடாது” என்று பல குரல்கள் கடுமையாக எதிர்த்தன.

சேர்மன் குரல் அந்த எதிர்ப்பில் ஒடுங்கியே போய்விட்டது.

“காந்தி சாவடியில் மகாத்மா சிலை அருகிலிருந்து தொடங்கலாமா? அதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாதென்று நினைக்கிறேன்?" என்றார் வைஸ் சேர்மன்.காங்கிரஸ் மெம்பர்கள் இதைக் கரகோஷம் செய்து வரவேற்றனர்.

“அந்த இடம் பஜனை பாடத்தான் லாயக்கு” என்று மெல்ல ஆரம்பித்தார் இடிந்தகரை பாலகிருஷ்ணன்.

“பஜனையைத் தூவிக்காதே! நாக்கு அழுகிவிடும்.” என்று சீறினார் ஜனசங்கப் பிரதிநிதி. உடனே ஜனசங்கப் பிரதிநிதியை நோக்கி மடக்கு நாற்காலியைத் தூக்கி வீசினார், இடிந்தகரை முக்குலத்தோர் பிரதிநிதி முருகையாத் தேவர் குறுக்கே புகுந்து அந்த நாற்காலியைப் பிடித்து மீண்டும் அதை இடிந்தகரையின் மேல் திருப்பிவிட்ட