பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————இரண்டாம் தொகுதி/உலகனுர் பஞ்சாயத்தில் ஒருமைப்பாட்டு விழா 🞸 951

போது வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் இ.க.வுக்கு ஃபெல்லோடிராவலராகி மற்றொரு நாற்காலியை எடுத்து வீசினார். அது குறிதவறி முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த வஹ்ஹாப் சாகிப்பின் மேல் விழுந்துவிடவே, "அரே! பத்மாஷ்” . என்று கத்தியபடியே மேஜைமேல் கிடந்த டேபிள் வெயிட் கண்ணாடிக் குண்டை எடுத்து வாழவந்தானின் மண்டையில் வீசினார் அவர். வாழ வந்தானின் முன் நெற்றியில் விழுந்து காயப்படுத்திற்றுக் கண்ணாடிக்குண்டு. முன் நெற்றியில் இரத்தம் வடிவதைப் பார்த்ததும் வ.க. உறுப்பினருக்குக் கடுங்கோபம் மூண்டது. மேஜையை கருடவாகனம் போல் இரு கைகளாலும் அலக்காகத் துக்கினார் அவர். உடனே அங்கே பிரளயம் மூண்டது. நாற்காலிகள் நொறுங்கின. மேஜைகள் உடைந்தன. ஒரு குட்டி கலாசாரப் புரட்சியே மூண்டு விட்டதுபோல மகிழ்ந்தார் இ.க. உறுப்பினர்.சேர்மன் பயந்துபோய் எழுந்து ஓடிவிட்டார். கமிஷனர் போலீஸுக்கு ஃபோன் செய்ய எழுந்து ஓடினார். அட்டெண்டர், மீட்டிங் கிளார்க், காஷியர் எல்லாம் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வரவழைத்திருந்த பாதாம்கீர் அண்டாவில் மீதமிருந்ததைச் சுகமாகக் குடித்துக் கொண்டிருந்தனர்.

வைஸ்சேர்மன் வரதராஜனின் முகத்தில் யாரோ சிவப்பு மைப்புட்டியை வீசி அடித்துவிடவே, அவர் தன் முகத்தில் தெறித்துவிட்ட சிவப்புமையையே இரத்தமாகக் கருதிப் பயந்து வீல் என்று கத்தினார். வீசப்பட்ட மை சிவப்பாக இருந்ததனால் அவ்வளவு பதற்றத்திலும் கச்சிதமாகச் சிவப்பு மையையே தேடி எடுத்து வீசியது கம்யூனிஸ்ட் உறுப்பினராகவே இருக்கக் கூடும் என்ற காங்கிரஸ் வைஸ் சேர்மனுக்குத் தோன்றியது. அவர் முகத்தில் - சட்டையில், வேஷ்டியில் எங்கும் சிவப்புக் கரையோடு ஒடியதை அரைகுறையாகக் கவனித்த அட்டெண்டர் ஆரோக்கியசாமி, வைஸ் சேர்மன் ரத்தக் கரையோடு ஒடறார். அவரை யாரோ குத்திட்டாங்க போலிருக்கு - என்று ஒதுங்கி நின்ற ‘தினப் பளீர்’ நிருபரிடம் கூறவும் அந்தப் ‘பளிர்’ நிருபர் உடனே ‘வைஸ் சேர்மனுக்குக் கத்திக்குத்து! இரத்தக் கறையோடு ஓடினார். உலகனூர்ப் பஞ்சாயத்து மீட்டிங்கில் கலகம்’ - என்று அதை நியூஸாகவே எழுதத் தொடங்கி விட்டார். நடக்காத நியூஸுக்குத்தான் அவர் எப்போதும் நிருபர்.

கலகத்தில் கமிஷனரின் மூக்குக் கண்ணாடியை யாரோ உடைத்து விட்டார்கள். போலீஸ் வந்தபோது ஸ்தலத்தில் யாருமே இல்லை. சாயங்காலம் கணக்கெடுத்தபோது உலகனூர் பஞ்சாயத்து ஆபீஸில் பத்து மடக்கு நாற்காலிகள், நாலு மேஜை, மூன்று மைப்புட்டி, ஐந்து டேபிள் வெயிட்கள், இருபது கண்ணாடி கிளாஸ்கள் உடைந்து போயிருப்பது தெரிந்தது. பஞ்சாயத்து கமிஷனருடைய மூக்குக் கண்ணாடியும் வஹ்ஹாப் சாஹிப்பின் மண்டையும் உடைந்துபோன நஷ்டம் தவிர பாக்கி எல்லா நஷ்டங்களும் யூனியன் ஆபீஸின் நஷ்டமாகவே வாய்த்தன.