பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

960 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

அதைப் புரிந்துகொண்டவள் போலப் பேச்சை அதோடு நிறுத்தினாள். மாலதியின் முன்கோப இயல்பும் படபடப்பும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு மேல் மாலதியிடம் வாயைக் கொடுத்தால் அவள் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லித் தாறுமாறாக நடந்துகொள்வாள் என்பதை சுபத்ரா பழக்கத்தில் அறிந்திருந்தாள். அன்று அதற்குப்பின்பு ஹாஸ்டல் மணி அடிக்கின்றவரை இருவரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமாக அமர்ந்திருந்துவிட்டு மணி அடித்ததும் எழுந்து சென்றனர்.

ஹாஸ்டலில் அவர்கள் இருவரும் ஒரே ரூமில் வசிப்பவர்கள். ஒன்றாகப் பழகுகின்றவர்கள். அந்தரங்க சிநேகிதிகள். தங்களுக்குள் எதையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நட்பு இருந்தது. ஆனால், குணங்களில் மட்டும் அளவு படுத்த முடியாத ஏற்றத் தாழ்வு இருந்தது. சுபத்ராவுக்குப் பிடித்தது மாலதிக்குப் பிடிக்காது. மாலதியின் வழி தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் சுபத்ரா அதை வெறுத்ததில்லை. குணங்களின் ஏற்றத்தாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அதை ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டு அடிக்கடி சண்டை சச்சரவுகளுக்கு இடங்கொடுத்ததில்லை அவர்கள்.

தான் எவற்றையெல்லாம் நவநாகரிகமாகக் கருதுகின்றாளோ, அவற்றின்படி தன் நடையுடைபாவனைகளை அமைத்துக் கொண்டிருந்தாள் மாலதி, ஆடம்பரத்திலும், பிறரைக் கவர்கின்ற விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அவளுக்கு அதிகமான பிரியம் உண்டு. ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி; தன்னைப்போல ஆடம்பரத்தை விரும்பாதவர்களை அவள் அலட்சியத்தோடு தான் நோக்குவாள். அந்த இயல்பு நீக்க முடியாதபடி அவளோடு அவளாகப் படிந்திருந்தது. வேண்டுமென்றே அவள் இப்படி நடந்து கொள்வதாகச் சொல்லி விடுவதற்கும் இல்லை. அது ஒரு போக்கு அலாதியான தன்மையுடையது.

சுபத்ராவின் இயல்பு இவைகளுக்கு நேர்மாறானது. அவள் எளிமையையே விரும்புகின்றவள். “நாகரிகம் என்பது உடல் அளவில் அமையவேண்டியது இல்லை. உள்ளத்தோடும் குணங்களோடும் அமையவேண்டிய பண்பாடு அது” என்று அழுத்தமாக நம்புகின்றவள். நடையுடை பாவனைகள், பிறரிடம் பழகுவது எல்லாவற்றிலும் எளிமையைக் கடைப்பிடித்தாள் அவள்:

இதன் விளைவாக ஏற்பட்ட வம்பு என்னவென்றால் அந்தக் காலேஜில் மாணவர்கள், மாணவிகள் ஆகிய இரு சாராரும் மொத்தமாக ஒன்றுசேர்நது சுபத்ராவையும் நாராயணனையும் ஒருவிதமாக ஒதுக்கிப் பேசிக் கிண்டல் செய்வது வழக்கமாகி விட்டது. அதுவும் மாலதி ஒருத்தியே அதைத் தனிப்பட்ட சிரத்தையோடு செய்துவரத் தவறுவதில்லை. சுபத்ராவையாவது அவள் சில சமயங்களில் விட்டு வைப்பாள்.நாராயணனைத்தான் என்ன காரணத்தாலோ, அவள் தன் முழு வைரியாக எண்ணி வந்தாள். அவனைப் பற்றிப் பேசுவதற்கு எங்கே, எப்போது வாய்ப்பு நேர்ந்தாலும் சரி, அவள் அவன் மீது தனது முழுக் குரோதத்தையும் கொட்டிப் பேசத் தவறமாட்டாள். அது அவளுக்கு ஒரு பொழுதுபோக்கு ஒரு வேடிக்கை