பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/பகைமையின் எல்லை 🞸 961

இவ்வளவிலும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், அவள் தன்னைப் பற்றி அப்படிக் கண்டபடி பேசுகிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தும், நாராயணன் அதைப் பற்றிக் கண்டித்து அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாததுதான். “நீங்கள் என்னைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களில் அநாவசியமாக ஏதேதோ பேசி வருகிறீர்களாம். இது அவ்வளவு தூரம் நல்லது இல்லை" என்று தன்னிடம் நாராயணன் கூறுவதற்கு வருவான் - ஏன், கூறவேண்டும் என்று ஆவலாக அவள் எதிர்பார்த்தது வீணாயிற்று. அவன்தன்னை லட்சியம் செய்யாமல் நடந்து கொள்கிறான்' என்பதை எண்ணும்போது கொதி பொறுக்காத நொய்யரிசி போலப் பொங்கி அசூயையால் குமுறும் அவள் மனம் ஆவலில் விளைந்த அந்த அசூயையை நாளடைவில் பகையாக மாற்றிக்கொண்டுவிட்டது அவள் உள்ளம். இந்த மானஸீகப் பகைமை மாலதியின் உள்ளத்தில் வேரூன்றி வளரத் தொடங்கிய நாளிலிருந்து சுபத்ராவை அவள் கேலி செய்வது நின்றுவிட்டது. நாராயணன் ஒருவனே அதற்குப் பரிபூரணமாகப் பாத்திரன் ஆனான். அவனுடைய அடக்க ஒடுக்கமான தோற்றம் அவள் நவநாகரிகக் கண்களுக்குப் ‘பழைய பத்தாம்பசலி’ ஆகத் தெரியும். ஆனால், இப்படித் தெரிவது மாலதியின் கண்களுக்கு மட்டும்தான். அவள் உள்ளம் குரோதத்தால் புகையும் அந்த நிலையிலும், மனத்தின் அந்தரங்கத்திற்கும் அந்தரங்கமாகி ஆத்தரிகமாக விளங்கும் அவள் உள் மனமோ என்றால் நாராயணனது அந்தத் தோற்றத்தில் ஏதோ ஒருவகைக் காம்பீர்யம் இருப்பதாக ரஸிக்கும். இது அவளது உள்ளத்திற்கு மட்டும் தெரிந்த உண்மை; அவளுக்கும் அவள் சரீரத்துக்கும், அந்த சரீரத்தின் மனோபாவங்களை மதிப்பிடுவதற்கு முயலும் உலகத்திற்கும்கூடத் தெரியாத உண்மை - மறைந்த உண்மை.

நாராயணன் ஐந்தே முக்கால் அடி உயரம் வளர்ந்திருப்பான். வாரி முடிந்த கட்டுக்குடுமி. கருகருவென்று சுருண்டு வளர்ந்திருக்கும் அந்தக் குடுமி, அவனுடைய தோற்றத்திற்குப் பிரதானமான செளர்ந்தர்ய முத்திரை. காதுகளில் புஷ்பராகக்கல் பதித்த இரண்டு வெள்ளைக் கடுக்கன்கள். பரந்த நெற்றியில் சிறு சந்தனப் பொட்டு. நீண்ட நாசி, பார்வையிலேயே நகைபொதிந்த பிரகாசமான நயனங்கள். எப்போதும் வாய்விட்டுச் சிரிக்கும் பழக்கமேஇன்றி அசைவிலேயே புன்னகை செய்யும் மென்மையான உதடுகள்.முக்கோண வடிவாக நீண்டிருந்த அவன்முகத்தால் குடுமியும், குடுமியால் முகமும் பரஸ்பரம் கவர்ச்சி பெற்றன. முழுக்கைக் கதர் ஜிப்பாவும், நாலு முழம் வேஷ்டியும்தவிர, ஆடை விஷயத்தில் எந்தவிதமான ஆடம்பரமும் அவனை அண்டியதே இல்லை. இத்தகைய தோற்றத்தோடு அவன் நடந்துவரும்போது பார்த்தால் கொடியுடனே கூடிய வெண்தாமரைப் பூ ஒன்று காற்றிலே வேகமாகப் பறந்து வருவதுபோல் தோன்றும்.

சிதம்பரத்திலே மிகப் பெரிய செல்வந்தராகிய, வைதிக கனபாடிகள் ஒருவரின் ஏக புத்திரன் அவன். இயற்கையாகவே சாந்த குணமும் அடங்கிய சுபாவமும் அவனிடம் அமைந்திருந்ததனால், தகப்பனால் கண்டிக்கும்படியான நடையுடை பாவனைகள் தன்னை நெருங்காமல் அவனாகவே கவனத்தோடு நடந்து கொண்டான். அதுதான்,

நா.பா. II - 22