பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

962 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

‘பத்தாம் பசலி, கட்டுப்பெட்டி, உம்மணாமூஞ்சி’ என்ற பெயர்களை மாலதி போன்ற பெண்களிடமிருந்தும் சக மாணவர்களிடமிருந்தும் அவன் அடையக் காரணமாக இருந்தது.

ஆனால், பிறர் தன்னைப்பற்றி என்ன எண்ணுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், தன்னிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பனவற்றில் அதிக கவனத்தைச் செல்லவிடாமல், தான் தனக்காகக் காலேஜ் வாழ்வை எப்படி நடத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மட்டும் கவனத்தைப் பயன்படுத்தி இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ளும் பண்பு நாராயணனிடமிருந்தது.

இந்தப் பண்புதான் காலேஜ் வாழ்க்கையில் அவனுக்கு ஒரு நல்ல தற்காப்புக் கவசத்தைப்போல உபயோகப்பட்டு வந்தது.மற்ற மாணவர்கள், மாணவிகள் தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சில சந்தர்ப்பங்களில் அவன் மனத்திலும் ஆக்ரோஷம் தலைகாட்டும். ஆனால், “இரண்டு கைகளையும் தட்டினால் தானே சப்தம்?” நாம்தான் பொறுத்துக்கொள்வதால் என்ன குடிமுழுகிப் போய்விடும்?” என்று அப்போது தன் மனத்தை அடக்கிக் கொள்ள அவன் பழகியிருந்தான்.

'லேபரேடரி'யில் பரிசோதனைகள் நடக்கும்போது, மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனியே பிரிக்காமல் எல்லோரையும் சேர்த்து மொத்தத்தில் நான்கைந்து ‘க்ரூப்’களாக இணைத்து விட்டுவிடுவார் அந்தப் பேராசிரியர்.

அதனால் சில வகுப்புக்களில் மாலதி, நாராயணன் ‘குரூப்பில்’ இருந்து அவன் கீழ் அன்றைய ‘எக்ஸ்பெரிமெண்டு’களை நடத்தவேண்டியதாக நேர்ந்துவிடும். அப்போதெல்லாம் தன் தோழிகளிடம் சொல்வதுபோல நாராயணன் காதில் நன்றாக விழும்படி, “அடி வனஜா! இன்றைக்கு என்னை அந்தத் ‘தரித்திர’ நாராயணன் ‘குரூப்’பிலே மாட்டி விட்டுவிட்டாரடி இந்தப் புரொபஸர். பாரேன் வேடிக்கையை! பரிசோதனையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஒடும்படி படாதபாடுபடுத்திவிடுகிறேன்” என்று உரத்த குரலில் சிரித்துக்கொண்டே கூறுவாள்.

அதைக் கேட்டு மாணவர்கள் உள்பட யாவரும் நகைப்பார்கள். சுபத்ரா ஒருத்திதான் மனமார நாராயணனிடம் அனுதாபம் காட்டுவாள். ஆனால், இதைக் கேட்டவுடன், மாலதியின் கண்களில் நன்கு படும்படி மிகவும் சர்வசாதாரணமான அலட்சியப் புன்னகை ஒன்றை உதடுகளில் நெளிய விட்டுக்கொண்டே பரிசோதனை வேலையில் ஆழ்ந்துவிடுவான் நாராயணன்.

- அவனது அந்த அசாத்திய மெளனமும் அலட்சியப் புன்னகையும்தான் மாலதியின் உள் மனத்தை அணு அணுவாகச் சுட்டுக்கொண்டிருந்தது. ஆனால், வெளிக்குத் தெரியாமல் குரோதப் புகையில் அந்தச் சுடுநெருப்பு மறைந்திருந்தது. வேறுவிதமாகச் சொன்னால் அவள் உள்ளத்தை வற்புறுத்தி மறைக்க முயன்றாள் என்றுதான் சொல்லவேண்டும்.