பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132. உயிர் என்ற எல்லை

றை வாசலில் நிழல் தெரிந்தது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தலையைப் பின்புறமாகத் திருப்பினேன். ராஜம் தலையைக் கோதி முடிந்தவாறே நின்று கொண்டிருந்தாள். அவள் நின்று கொண்டிருந்த குறிப்பைப் பார்த்தால், எதையோ சொல்ல வந்தவள் மாதிரித் தோன்றியது.

“என்ன ராஜம்!”

“ஒன்றுமில்லை! இன்றைக்குக் கார்த்திகை சோமவாரம்.”

“இருக்கட்டுமே! அதற்கென்ன?”

“திருப்பரங்குன்றம் வரை போய் விட்டு வரலாமென்று?”

“ஏது திடீரென்று இப்போது முருக தரிசனத்திற்கு ஆசை வந்து விட்டது?”

“ஆசை என்ன ஆசை வேண்டிக் கிடக்கிறது? குழந்தையா குட்டியா? ஒன்றுமில்லாமல் இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால், ஏதாவது தோன்றுகிறது!”

“நீயும் நானுமடி எதிரும் புதிருமடி என்று ஏதாவது உட்கார்ந்து அரட்டையடித்தால் போயிற்று...”

“ஏன் பேச்சை வளர்த்துகிறீர்கள்? மூன்றும் மூன்றும் ஆறேயணா-பஸ் சார்ஜு! நிம்மதியாகப் போய் விட்டு வந்து விடுவோம்! வரச் சம்மதமா? இல்லையா?”

“நான் வருகிறேன். மாட்டேனென்று சொல்லவில்லை. இன்னும் பழைய அசடாகவே இருக்கிறாயே என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது!”

“நான் அசடுதான்! அசடாகவே இருந்து விட்டுப் போகிறேன். நீங்கள் நல்ல சமர்த்தாக இருங்கள். இப்போது வர முடியுமா, முடியாதா?”

“இந்தப் பெரிய மதுரையிலே எத்தனை சினிமாவில் இன்றைக்கு ‘மாட்டினி’ நடக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு டவுன் பஸ்ஸுக்குக் க்யூவில் நின்று திருப்பரங்குன்றமா போக வேண்டுமென்று சொல்கிறாய்?”

ராஜம் என்னை முறைத்துப் பார்த்தாள். உண்மையில் அவள் போக்கு இந்த ஆறு வருஷங்களாக எனக்குப் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. நல்ல அழகி. இளம் பெண்தான்.ஆனால், அந்த இளமைக்கும், அழகுக்கும் உரிய கிளர்ச்சியோ, எழுச்சியோ சிறிதும் இல்லை. ‘குழந்தை குட்டிகள் இல்லையே’ என்ற ஏக்கமா? அப்படி அந்த ஏக்கத்தாலும் அவள் அதிகம் உருகுவதாகத் தெரியவில்லை. அழகு என்னவோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்குகிற மாதிரி அந்த உடலில் கிளுகிளுத்துக்