பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

968 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

கொண்டிருந்தது.சண்பகப்பூவின் இதழ் நுனியைப்போல் அவளுக்கென்றே அமைந்த ஒரு நிறம். எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்.

ஆனால்,கோவில் குளம், தீர்த்தம் என்று அவள் வழி ஒரு தினுசாயிருந்தது. சினிமா, சபா, டாய்லெட் ஸெட், ஜார்ஜெட் புடவை என்று அவளை நாகரீக போதையில் மூழ்கச் செய்து, அதன் வெறியை நான் ரஸிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவளோ, என்னையும் தன் வழிக்கு இழுத்துச் சென்றுகொண்டிருந்தாள். அப்ஸரஸைப்போல ஒரு மனைவியும் வாய்த்துக் குழந்தை குட்டி என்று பிடுங்கல் எதுவுமின்றி அமுதகலசம் போலக் கெடாத உடலும் இருந்துவிட்டால் ஒரு வகையில் கணவனுக்கு அது பாக்கியம்தான். ஆனால், அத்தகைய மனைவி ஒரு வைதிகக் கட்டுப் பெட்டியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. கணவன் ‘லிப்ஸ்டிக்’ தடவிக் கொள்ளச் சொன்னால், அவன் திருப்திக்காக உடனே அதைச் செய்யக் கூடியவளாக இருக்க வேண்டும்.

என் ராஜம் அப்படி இல்லை, ஆளைக் கிறங்கச் செய்கிற அழகுக்கு உள்ளே அண்ட முடியாத ஒரு தனித்தன்மை மறைந்து கிடந்தது. மஞ்சள், குங்குமம் தவிர, வேறெந்த ஆடம்பரப் பொருள்களையும் அவள் தொடுவதே இல்லை.

"என்ன, இப்படி உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தால் எப்போது புறப்படுகிறதாம்? இருட்டுவதற்குள் திரும்பிவிடவேண்டுமே?...”

"இதோ வந்துவிட்டேன்! கொஞ்சம் இரு.”நான் எழுந்து முகங்கழுவிக்கொள்ளச் சென்றேன்.

எதை எதையோ பாக்கியம் என்கிறார்களே! அழகான மனைவி அருகிலே வர நடந்து செல்லும் பாக்கியத்தை விடச் சிறந்தது வேறொன்று இருக்கிறதா? தென்றல் வீசுவதுபோல் மனத்தில் நிலவும் இப்படிப்பட்ட ஒருவகைப் பெருமிதத்திற்கு ஈடு இணை உண்டா?

ராஜம் வலப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தாள். என் உயரத்துக்குச் சரியான உயரம். நேரே எதிர்ப்புறம் நிமிர்ந்து பார்க்கத் தயங்கும் பார்வை. பூங்கொடி அசைவது போல அவளுக்கென்றே அமைந்த ஒருவகை நடை குழந்தை குட்டிகளைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாவிட்டால்தான் என்ன? இப்படி ரதியைப்போல ஒரு மனைவி இருந்தால் போதாதா? கணவனுக்கு மனைவி குழந்தை, மனைவிக்குக் கணவன் குழந்தை! பரஸ்பரம் குழந்தையாகிவிட்டால், பின் வேறு குழந்தை எதற்கு?

“உங்களைத்தானே! பஸ்ஸுக்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே?”

“பின் என்ன கூட்டமில்லாமலா இருக்கும்! சொன்னால் நீ கேட்கிறாயா, என்ன? எப்படியும் போய்த்தான் ஆகவேண்டும் என்கிறாய்! என்ன செய்வது? கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்துக் கொண்டுதான் போக வேண்டும்.”

அவள் ஒரக்கண்ணால் ஒரு வெட்டு வெட்டினாள். என் பேச்சு ‘கப்’பென்று நின்றது. ஆண் வாயைத் திறந்து வார்த்தைகளைச் சொல்லித் தடை செய்ய