பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/உயிர் என்ற எல்லை 🞸 969

வேண்டியதைப் பெண் தனது கண்ணின் ஒரத்தை ஒரு சுழற்றுச் சுழற்றுவதனாலேயே தடுத்து நிறைவேற்றிக் கொண்டு விடுகிறாள்.

சிற்பியின் கைகளில் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை போன்ற அந்தப் பாதங்கள் தார் ரோடில் நடந்து லேசாகக் கன்றிச் சிவந்திருந்தன.

“செருப்பு வாங்கிக்கொள் என்று படித்துப் படித்துச் சொல்றேனே. நீ கேட்கிறாயா? தார் ரோடில் வெறுங் காலோடு நடந்து, காலைக் குட்டிச் சுவராக்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!”

“எனக்கு ஒன்றும் அந்தப் பவிஷு எல்லாம் வேண்டாம்”

“பவிஷு-க்குச் சொல்ல வரவில்லை ராஜம்! தார் ரோடில் செருப்பில்லாமல் நடப்பது எப்போதும் கெடுதல். அதற்காகச் சொல்ல வந்தால்”...

அவள் பதில் பேசவில்லை. பஸ் ஸ்டாப்பை அடைந்து விட்டோம். அவள் பெண்கள் ‘க்யூ’வில் போய் நின்றாள். நான் ஆண்கள் க்யூவில் நின்றேன்.

கண்களில் பார்வைப் புலனை ஒட விட்டதில் வேடிக்கையான ஒரு நினைவு சரம் தொடுத்தது. க்யூவில் நின்று கொண்டிருந்த வரிசை வரிசையான பெண் உருவங்களை மெல்ல விழிக்கடைகளால் நிறுத்தி நிறுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராஜம் அத்தனைப் பேருக்கும் கடைசியில்தான் நின்றாள்.ஆனால், எனக்குள், என் மனத்தின் எண்ண வளையங்களுக்குள் பெருமிதமான ஒர் பிரமை! வரிசையில் நின்றுகொண்டிருந்த அத்தனைப் பெண்களைக் காட்டிலும் என் ராஜத்தின் அழகு விஞ்சி நிற்கிறார்போல ஒர் உணர்வு. பெங்களுர்ப் பட்டு, நவநாகரிக அலங்காரங்கள், விதவிதமான பட்டுப் பாதரட்சைகள், இவற்றோடு நிற்கும் பெண்களுக்கு இடையே, அரக்குக் கலர் சாதாரணத் துணிப்புடைவையும் பச்சை ரவிக்கையுமாக நிற்கும் என் ராஜம், செளந்தரியத்தின் முடிவுக்கு ஒரு முடிவு காட்டிக் கொண்டிருக்கிறாள்.

“சார், முன்னால் நகருங்கள்! எங்கேயோ பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்களே?... உங்களுக்கு முன்னால் ‘க்யூ’ எவ்வளவு தூரம் போய்விட்டது பாருங்கள்” என்று எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர் என்னை விரட்டினார்.

சட்டென்று திரும்பி உதட்டைக் கடித்துக்கொண்டே, முன்னேறினேன். கூட்டத்தின் நடுவே உணர்வு வரம்பை மீறிக் கண்களையும் கண்களின் வழியே எண்ணத்தையும் ஒட விட்டுவிட்டதற்காக என்னை நானே கடிந்துகொண்டேன். பொருள் தனக்குச் சொந்தமானது என்பதற்காக அதன் அழகை எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் அனுபவித்துவிட எண்ணலாமா? தப்புத்தான்! அழகான பெண் தனக்கு மனைவி என்று எண்ணுவதிலும், ஒதுங்கி நின்று அதன் உண்மையை ஆராய்ந்து பார்க்க முயலுவதிலும் திருப்திக்காக ஏங்குகிற ஒர் ஆசை இருக்கத்தான் இருக்கிறது! ஆனால், அதற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டாமா? ‘க்யூ’ முன்னேறியது. நான் பஸ்ஸில் ஏற வேண்டிய நேரம் வந்தது.