பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/உயிர் என்ற எல்லை 🞸 961


முடியவில்லை, அல்லது அவ்வுணர்வு என்னை விடவில்லை என்றாலும் பொருந்தும். மலை அடிவாரத்தை ஒட்டிக் கிழக்குப்புறத்தில் நீர் நிறைந்த கண்மாய். காற்று சிலுசிலுவென்று குளிர்ச்சியோடு வீசிக்கொண்டிருந்தது.

ராஜத்தின் தலைமயிர் புஸுபுஸுவென்று பிரிந்து சுருள் சுருளாக முன் நெற்றியில் விளையாடியது. துவளத் துவள நடந்துகொண்டிருந்தாள்.

“என்ன, கிரிப்பிரதட்சிணம், கிரிப்பிரதட்சிணம் என்று பறந்தாயே ஒழிய நடை ஒடவில்லையே! அதற்குள் தளர்ந்து துவண்டுவிட்டாயே!...”

“நான் ஒன்றும் தளரவில்லை.நீங்கள் ஏதாவது வாயைக் கிண்டி,வம்புபண்ணாமல் பேசாமல் வந்தாலே போதும்”.

உண்மைதான்! அவள் வாயைக் கிண்டி விட்டு, அந்த முகத்தின் நெளிவு சுளிவுகளை அழகு பார்ப்பதில்கூட எனக்குத் தனிப்பட்ட ஒருவகை ஆசை. முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். இல்லையென்றால் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இரண்டும் முடியாதபோது கோபமுண்டாகிற விதத்தில் ஏதாவது பேசிவிடுவேன்.

எனக்கு அது ஒரு ரஸமான பொழுது போக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

“ராஜம்! இந்தக் கண்மாயைப் பார்த்தாயா? கரையை முட்டமுட்ட நீர் தளும்புவதில் ஒரு கவர்ச்சியிருக்கிறது.”

“இந்த மலையின் நிழலும் கோவிலும் கோபுரமும் கூடக் கண்மாய் நீர்ப்பரப்பில் தெரிகிறதே!”

கார்த்திகைச் சோமவாரக் கூட்டம் ஊருக்குள்ளும் கோவிலிலும் நெரிசல் பட்டதே ஒழியக் கிரிப்பிரதட்சணை வழியில் ஈ, காக்காய் கூட இல்லை. தனிமையின் அரசாட்சிதான்.

பேசிக்கொண்டும், பேசிக்கொள்ளாமலும் நடந்தோம். கண்முன்னே நீண்டு கொண்டிருந்த வழியில் மலையின் தென்புறத் திருப்பம் வளைந்தது.

“இந்தத் தென்புறத்து மலையில் ஏதோ ஒரு குகைக்கோவில் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதை மறந்து விடாதீர்கள். கண்டிப்பாக அதற்குள் போய்ப் பார்த்துவிட்டுப் போகவேண்டும்”.

“தேவியின் உத்தரவு எப்படியோ, அப்படியே செய்யக் காத்திருக்கிறேன்".

"இந்தக் கேலிக்கெல்லாம் ஒன்றும் குறை இல்லை...?”

தென்புறம் மலையடிவாரத்துப் பாறைகளில் சரளைக் கற்களை உடைத்துக் குவித்துக்கொண்டிருப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால், அன்றைக்கு அதுவுமில்லை. கண்ணுக்கெட்டிய துரம்வரை மனித சஞ்சாரமே இல்லை. தெற்கே கப்பலூர் ஸ்டேஷனை நோக்கிச் செல்லும் ரயில்பாதை, அரக்கு நிறச்சுக்கான் குன்றுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தது. அதற்கும் அப்பால் மில்காலணியும், திருநகர் பங்களாக்களும் மரக்கூட்டங்களுக்குள்ளே தென்பட்டன.