பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

972 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

“உன்னைப்போல அசடு கிடையவே கிடையாது ராஜம் எத்தனை ஆயிரம்பேர் சோமவாரத்திற்காக இங்கே வந்திருக்கிறார்கள் யாராவது ‘கிரிப்பிரதட்சினம் செய்கிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார்களா, பார்!உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான்தான் அசட்டுத்தனமாகக் கிளம்பினேன்.”

“கிளம்பினதால் இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம்? இதோ நிம்மதியாகக் காற்று வாங்கிக் கொண்டு காலார நடக்கிறோம்.”

தென்புறத்தில் சரியாக நடுமையத்திற்கு வந்துவிட்டோம். எதிரே மிக அருகில் மலைப்பாறையில் செதுக்கப்பட்ட அந்தக் குகைக் கோவில் தெரிந்தது. அந்தக் குகைக் கோவிலைப் பற்றி ஏதேதோ சொல்வார்கள். ஆதிமுருகன் கோவில் திருப்பரங்குன்றத்தில் இந்தக் குகையில்தான் இருந்தது என்றும், நக்கீரர் பூதத்தினால் சிறையில் வைக்கப்பட்ட போது, இந்த முருகனைப் பாடியே விடுதலை பெற்றார் என்றும் கூறுவார்கள்.

குகைக்குள் பகலிலேயே இருட்டு மண்டிக் கிடக்கும். உட்புறம் சுவர்போலத் தாங்கிக்கொண்டிருந்த மலைப்பாறையின்மேல் முருகன் சிலை செதுக்கப்பட்டிருந்தது. வெளிப்பக்கத் தோற்றத்தில் குகை துண்களோடு கூடிய ஒரு மண்டபம். இந்த மண்டபத்தில் தற்கொலை, சூதாட்டம், கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், என்று அசம்பாவிதமான செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன.

“இந்த மண்டபத்துக் குகைக்குள் போக வேண்டும் என்றா சொல்கிறாய்?”.

“போய்விட்டுத்தான் வருவோமே? இத்தறுவாய்க்கு நீங்கள் கூட வரும்போது பயமா என்ன?”

“அஜந்தா குகை பாழ்போகிறதா என்ன? உள்ளே போக வேண்டாம். வெளியிலிருந்தே பார்த்துவிட்டுப் போய்விடலாம்.”

“முடியாது! நீங்கள் வேண்டுமானால் வெளியே நின்று கொள்ளுங்கள். ஆதிமுருகன், வரப்பிரசாதி. நான் பார்க்காமல் வரவே மாட்டேன்.” ராஜத்தின் பிடிவாதத்திற்குக் கேட்கவா வேண்டும்?

மண்டபத்தில் ஏறிக் குகை வாசலை நெருங்கினோம். குகைக்குள் மங்கலாக இருள் பரவியிருந்தது. நான் முன்னால் நடந்தேன். ராஜம் என் வலது கையைப் பிடித்துக் கொண்டு என்னைப் பின்பற்றினாள்.

பாதி தூரம்கூட வந்திருக்கமாட்டோம். திடீரென்று ‘ஐயோ! என் கழுத்துலே கைபோடறானே பாவி!” - என்று ராஜம் பயங்கரமாக அலறினாள். நான் பின்புறம் திரும்புவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கை ஒன்று என் வாயை இறுக்கிப் பொத்தியது. வேறு இரண்டு கைகள் உடும்புப் பிடிபோல என் இடுப்பை வளைத்துப் பிடித்தன. நான் அசைய முடியவில்லை. அவள் கழுத்திலிருந்து சங்கிலியையும் கையிலிருந்து வளையல்களையும் கழற்றிக் கொள்வதை என் கண்கள் இரண்டும்