பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/உயிர் என்ற எல்லை 🞸 973

இருளில் கூர்ந்து நோக்கின. ஆனால், நான் என்ன செய்ய முடியும்! ராஜத்தின் வாயையும் யாரோ ஒரு முரடன் இறுக்கிப் பொத்திக்கொண்டிருந்தான்.பின்புறமாகத் திருகி அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டே, அவற்றில் இருந்த வளையல்களைக் கழற்றிக் கொண்டிருந்தான் இன்னொருவன்.நான் திமிறிக்கொண்டு பாய முயன்றேன். மின்னல் கீற்றுப்போல இருளில் பளபளக்கும் கத்தி ஒன்று என் நெஞ்சுக் குழிக்கு மிக அருகில் காட்டப்பட்டது. நான் அசையாமல் நின்றேன். ஓர் அங்குலம் முன்னுக்கு நகர்ந்தாலும் அந்தக் கத்தி என் நெஞ்சில் புகுந்துவிடும்.

அலங்கோலமான நிலையில், பூவைக் கசக்கி அத்தர் எடுப்பது போலத் திமிறவிடாமல் கையையும் கால்களையும் வாயையும் கட்டிப்போட்டு, ராஜத்தின் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

வேலை முடிந்தது. என்னை இறுக்கியிருந்த கைகள் விலகின. ராஜம் துவண்டு போய்க் கீழே விழுந்தாள். குகைக்கு வெளியே தடதடவென்று காலடிகள் பதிய ஆட்கள் ஒடும் ஒசை.

நான் அலறினேன். என் அலறலும் கூப்பாடும் குகைப் பாறைகளில் முட்டிமோதி வெளியேறும் ஆற்றலின்றி, அங்கேயே மடித்துவிட்டன.ராஜம் விக்கி விக்கி அழுதாள். ‘நீங்கள் அப்போதே சொன்னர்களே! நான் கேட்டேனா? பாவி எனக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.’

நான் அவளை எதிர்த்துத் திட்ட வேண்டுமென்று குமுறிக் கொண்டிருந்தேன். ஆனால், அவள் அழுகை என் குமுறலைத் தணித்துவிட்டது. என் கைகால்களில் வெடவெடப்பும் நடுக்கமும் இன்னும் ஓயவில்லை. மார்பு கொள்ளை போகிற மாதிரி (கொள்ளைதான் போய் விட்டதே) அடித்துக்கொண்டது.

கைத்தாங்கலாக அவளை மெல்ல நடத்திக் கூட்டிக் கொண்டு குகைக்கு வெளியே மண்டபத்துக்கு வந்தேன். திருடர்கள் போன சுவடே தெரியவில்லை! அந்த மலையடிவாரத்துப் பாறை இடுக்குகளிலும் தோப்புத் துரவுகளிலும் ஒடி ஒளிவதா பிரமாதம்? ராஜம் ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டாள். அவளை அப்படியே சித்திரவதை செய்துவிடலாம் என்ற அளவுக்கு முறுகிக்கிடந்த என் கோபம், இருந்த இடம் தெரியாமல் மெழுகாய் உருகிவிட்டது. எப்படியாவது ஆறுதல் சொல்லி, இருட்டுவதற்குள் அவளை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு போனால் போதும் என்றாகிவிட்டது. “இந்தா! ஏன் வீணாக அழுது கதறுகிறாய்? நான்தான் குகைக்குள் போகவேண்டாம் வழியோடு போய்விடுவோம்’ என்று அப்போதே சொன்னேனே! நீ கேட்டாயா? போனது போகட்டும்.ஆறு பவுன் சங்கிலியும் நாலு பவுன் வளையலும் போய்விட்டன. ரயிலையும் தவற விட்டுவிட்டு இங்கே சோற்றுக்குத் திண்டாட வேண்டாம். வா! போவோம்.”

அவள் வேண்டா வெறுப்பாக எழுந்திருந்து நடந்தாள். முன்போலவே என் வலது பக்கம் தோளோடு தோளாகத் தான் நடந்தாள். என் மனத்தில் மட்டும் அந்தப் பழைய பெருமிதம் இல்லை. ஏதோ இனம் புரியாத அருவருப்பு ஒன்றுதான் நிறைந்திருந்தது.