பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

974 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

பஸ் ஸ்டாப்பில் க்யூவில் நிற்கும்போதும், தெருவில் நடந்து சொல்லும்போதும் கிரிப்பிரதட்சிண ஆரம்பத்தில் கண்மாய்க் கரை ஓரமாக நடந்தபோதும், ‘அழகு! அழகு! அழகின் பிம்பம் நமக்குச் சொந்தமாக அருகில் நடந்து வருகிறது’ என்றிருந்த கர்வம், இப்போது எங்கே போயிற்றோ தெரியவில்லை.

பத்துப் பவுன் தங்க நகைகளைப் பறிகொடுத்தது எனக்கு மறந்துவிட்டது. எனக்குரிய ஸெளந்தரியவதியின் உடம்பை இரண்டு மூன்று முரடர்கள் தொடுவதற்குப் பறிகொடுத்துவிட்ட வேதனைதான் இதயத்தை நிறைத்துக் கொண்டு நின்றது. பஸ் ஸ்டாப்பிலோ, தெருவிலோ, தவறுதலாகக் கூட ஒரு பர புருஷனின் கை அவள் மேல் பட்டிருக்குமானால், அவன் கன்னத்தைப் பழுக்க வைத்திருப்பேன். அது என்னால் முடியும் இப்போதோ...?

“இந்த அவஸ்தைகள், ஆசாபாசங்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்து வருகின்றவரை தானா? கழுத்துக்கு முன்னால் கத்தியை நீட்டிவிட்டால், அழகு என்ன, எந்தப் பெரிய உரிமையையும் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான் போலும்!”

ராஜம் துவண்டுபோய்த் தளர்ந்து என் கையைப் பிடித்தாள். ஏதோ ஆபாசத்தைத் தொடுவது போலிருந்தது எனக்கு, சடக்கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.

“கொஞ்சம் கையைப் பிடித்துக் கொள்ளுங்களேன். ஒய்ந்து போய் வருகிறது”.

அருவருப்போடு கையைப் பிடித்துக் கொண்டேன். ராஜம் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லமாட்டாளா? என்று ஏங்கிய நாட்கள் எத்தனையோ ஆனால், இப்போதோ மனம் அருவருக்கிறது.

“கொஞ்சம் இப்படியே சரவணப் பொய்கைக்குப்போய்விட்டு,அப்புறம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம்?”

“ஏன்? சரவணப் பொய்கையில் என்ன காரியம்? திருட்டுக் கொடுக்க இன்னும் ஏதாவது மீதமிருக்கிறதா?”

"எனக்குக் குளித்துவிட்டு வரவேண்டும்!”

தெருத் திருப்பத்தை அடைந்துவிட்டோம். மலைவழி பின்னால் மங்கி மறைந்து விட்டது.ராஜம் சரவணப் பொய்கையில் குளித்தாள்.நல்ல காற்று அரை நாழிகையில், ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்குள்ளேயே, ஈரப்புடவை உலர்ந்து காய்ந்து விட்டது.

அவள் உடலைக் கழுவிவிட்டாள்.என் மனத்தில் ஏற்பட்ட அந்தச் சின்னஞ்சிறிய அருவருப்பின் கோர ரூபத்தை நான் எங்கே போய்க் கழுவுவது?

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற பாதையில் இரண்டு மூன்று சிறுவர்கள் ஒரு செத்த பாம்பின்மேல் கல்லை வேடிக்கையாக விட்டெறிந்து கொண்டிருந்தார்கள். உயிர் இருந்தால் பாம்பு எதிர்த்திருக்கலாம்; எதிர்க்காமல் ஒடியும் இருக்கலாம். இருந்தால்தானே?