பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/உயிர் என்ற எல்லை 🞸 975

ராஜம் குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்து கொண்டிருந்தாள். என்னோடு பேச அவளுக்குப் பயம்.அவளோடு பேச எனக்கு அருவருப்பு. மூளிக்கழுத்து, மூளிக்கைகள். அழகு என்னவோ குறைந்துவிடவில்லை. பழைய மோகக் கிறக்கம் அந்த வாட்டத்திலும் கிளம்பிக்கொண்டிருந்தது.

ஸ்டேஷனில் தெரிந்த மனிதர் ஒருவர் எதிர்ப்பட்டார்.

“என்ன சார் ‘அவங்களுக்கு’ எதாவது உடம்பு சரியில்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்காங்க” என் மனைவி ராஜத்தைக் குறித்துக் கேட்டார் அவர்.

“ஒன்றுமில்லை! சரவணப் பொய்கையில் குளித்தாள். குளிக்கும்போது தவறி விழுந்துவிட்டாள். அந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை போலிருக்கிறது”.

பச்சைப் புளுகுதான். ராஜம் என்னை ஒரு தினுசாக ஏறிட்டுப் பார்த்தாள். நான் துணிந்துதான் புளுகினேன். சமயா சமயங்களில் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் ‘பொய்’ என்ற சாதனம் தான் எவ்வளவு அருமையாகப் பயன்படுகிறது! உயிர்களின் அவஸ்தைக்கு அது ஒரு எல்லையோ?... (1978-க்கு முன்)