பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133. புகழ்த் துறவு

‘கலீர், கலீர்’ என்று சிலம்புகள் ஒலித்தன, தண்டைகள் குலுங்கின. கை வளைகள் ‘கல்’லென்ற சுநாதத்தால் பொருள் விளங்காத இன்பக் காவியம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தன. மிருதங்கமும், தபேலாவும் பதத்துடனே ஒத்து முழங்கின.

முத்துக்குமார நட்டுவனார் ஓர் ஓரமாக விரித்திருந்த விரிப்பில் அமர்ந்து, பதம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். தில்லை வடிவு அற்புதமாக அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள். கொடி போலச் சுழன்று ஆடினாள். கலையின் நுணுக்கம் பூர்ணமாக விளங்கிச் சோபிக்கும்படியான ஒவ்வோர் அம்சமும், அவளது நிருத்தியத்தில் குறைவற நிறைந்திருந்தன. அங்கங்களின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவிலும் பாவம் கனிந்து பரிணமித்தது.

பூவணைநல்லூர் வேதநாதசுவாமி கோவிலில், ஒரு சதிர்க்காரியின் நடனத்திற்காக இவ்வளவு ‘நடன ரசிகர்கள்’ கூடியது என்பது இதுதான் முதல் தடவை என்று துணிந்து கூறலாம். ‘கீதமினிய குயிலே’ என்று தொடங்கும் திருவாசகம் குயிற்பத்தில் உள்ள பாடலைப் பாடி முக்கால் மணி நேரமாக அதற்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் தில்லை வடிவு. மாணிக்க வாசகரின் வாக்கே, மனமுருக்கும் சுவையையுடையது; தேன் போன்றது! அந்தத் தெய்வீகத் தேனில் தனது அபிநய ஸெளந்தரியம் என்கிற அமுதத்தைக் கலந்து, கூடியிருந்தவர்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் தில்லை. எல்லோரும் கண்களாரச் செவியார மாந்தி மயங்கிக் கட்டுண்டு சிலைகளைப் போல மயங்கி நின்று கொண்டிருந்தனர்.

தம்மை மறந்த ஈடுபாட்டுடன் பதம் பிடித்துத் தாளம் மீறாமல் தில்லையை இயக்கிக் கொண்டிருந்தார் முத்துக்குமார நட்டுவனார்.

அர்ச்சகர் அர்த்தநாரீஸ்வரக் குருக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பரபரப்பாக நட்டுவனாரை நெருங்கி வந்தார்.

“என்ன நட்டுவனாரே இது? காலநேரம் தெரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே? தில்லை எங்கே ஒடிப் போகி விடப் போகிறாள்? நேற்றுத்தானே பொட்டுக் கட்டியிருக்கிறது. இனி மேல் அவள் பணிதானே வேதநாதனுக்கு? இன்று சுவாமி புறப்பாட்டுக்கு நேரமாகி விட்டது. கொஞ்சம் சீக்கிரம் முடியுங்கள்!” நட்டுவனார் மட்டுமில்லை; ஏக காலத்தில் இப்படி இரைந்து பேசிய குருக்களை, அப்படியே எரித்து பஸ்மம் ஆக்கி விடுவது போல நோக்கியது கூட்டம் முழுவதுமே. ஆனால், நட்டுவனாரும் அநேகமாக அந்தப் பதத்தோடு முடித்து விடக் கருதினார். ‘குருக்கள் கூறுவதும் ஒரு வகையில் நியாயம்தானே?’ என்று தோன்றியது நட்டுவனாருக்கும். நாட்டியம் முடிந்தது. கூட்டமும் மெல்ல மெல்லக் கலைந்தது.