பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/புகழ்த் துறவு 🞸 977

ஆனால்...

விதி என்கின்ற ஒரு சூத்திரக் கயிற்றை வைத்து இறைவன் மனித வாழ்க்கையை எவ்வளவோ விதமாகக் கணத்திற்குக் கணம் ஆட்டி அலைத்து மாற்றுகிறான்! அதில்தான் எவ்வளவு அற்புதங்கள் அடங்கி இருக்கின்றன? முதல் நாள் ‘பரம்பரைப் பாத்தியதை’ என்ற பேரில் தன் கோவில் தேவதாசியாகப் பொட்டுக்கட்டிக்கொண்ட அந்த இளந் தேவதாசியை வாழ்வின் இணையற்ற ஒளி வெள்ளத்தின் இடையே தவழவிட்டு விட்டு, பின் மீண்டும் தன் பணியை நாடி ஓடிவரச் செய்யவேண்டும் என்பது சர்வேசுவரனான வேதநாதப் பெருமான் திருவுள்ளக் கருத்தானால் அதை மாற்றுவதற்குக் கேவலம், இந்த அர்த்தநாரீஸ்வரக் குருக்களும், அந்த முத்துக்குமார நட்டுவனாரும் யார்? ஏன், தில்லை வடிவைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அவள் தாய் பொன்னியே தலைகீழாக நின்று பிடிவாதம் செய்தும் அதை மாற்ற முடியவில்லையே! விதியின் நிகழ்ச்சிகளுக்கு ஈஸ்வர ரீதியாக உள்ள மூல காரணம் அவன் மட்டுமே அறிந்தவை. அதன் பலாபலன்களும் அவனுக்கே வெட்டவெளிச்சம். ஜீவ குலத்தோடு எத்தனையோ கோடானு கோடி மார்க்கங்களில் விளையாடுகிறான் அவன். அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒர் உள்ளர்த்தம் இருக்கிறது. அது அவன் மட்டும் அறிந்தது. தில்லைவடிவையும் அப்படி ஒரு விளையாட்டு விளையாடி வேடிக்கை பார்த்தான் வேதநாதப்பெருமான்.

2

சுவாமி புறப்பாட்டிற்கு அறிகுறியாக வாசலில் அதிர்வேட்டுக்கள் போடத் தொடங்கியபோது, முத்துக்குமார நட்டுவனாரும், தாய் பொன்னியும் புடை சூழக் கோயில் மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள் தில்லைவடிவு. அவளும், உடன் வந்து கொண்டிருந்த தாயும் நட்டுவனாரும் கோபுரவாசலை அடைவதற்காகக் கோவிலின் தேவஸ்தான காரியாலயத்தின் அருகே வந்த சமயம்,கோவில் நிர்வாக அதிகாரி வடிவேலுப்பிள்ளை, வெள்ளைக்காரன் போன்று உடையணிந்து கொண்டிருந்த ஒருவரோடு அவர்களை நோக்கி எதிரே வந்தார். அவர்கள் எதிரே நின்றனர், வருகின்றவர்களை எதிர்மறித்துக் கொண்டுபோக முடியாமல்.

வடிவேலுப் பிள்ளையும் சூட்டும் கோட்டும் முகம் நிறைந்து காட்டும் கருப்புக் கண்ணாடியுமாக வந்த அந்த மனிதரும், நேரே தங்களை நோக்கித் தான் வருகின்றார்கள் என்பதைத் தில்லை முதலியவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்.

“நட்டுவனாரே! இவர் என் சிநேகிதர்.பட்டணத்தில் ஒரு சினிமாக்கம்பெனியிலே பெரிய வேலை இவருக்கு தில்லையைப்பற்றி ஒரு விஷயம் பேசிக் கலந்து கொள்ள வேண்டுமென்கிறார் இவர். இன்றைக்குத் தில்லையின் நாட்டியத்தைப் பார்த்தாராம். அப்போதிருந்து என்னிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறார். தில்லையின் அதிர்ஷ்டத்தை இவர் மூலமாக வேதநாதன் அனுப்பிவைத்திருக்கிறான்.பரவாயில்லை!

நா.பா. 11 - 23