பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

978 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

நீங்கள் நாட்டியம் முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. பொன்னி!தில்லையோடுநீயும் நட்டுவனாரும் வீட்டிலேயே இருங்கள்.நானும் இவரும் சுவாமி புறப்பாடு முடிந்ததும் அங்கே வருகிறோம். சாவகாசமாக விஷயத்தைப் பேசிக் கொள்ளலாம்.”

“சரிங்க புறப்பாடு முடிந்து வாங்க” ஏக காலத்தில் நட்டுவனார், பொன்னி, இருவருமே வடிவேலுப் பிள்ளைக்கு இப்படி விடை கூறினர். வடிவேலுப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையிடையே அந்தச் சினிமாக்கார மனிதர் தாமும் பேசுவதற்கு முயலும் ஆர்வத்தை முகத்திலே புலப்படுத்திக் காட்டினார். ஆனால் வடிவேலுப்பிள்ளை அவரை இடையிலே பேசவிட்டால்தானே? அவர் தில்லையையே வைத்த கண் வாங்காமல் கலைக் கண்களோடு கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் விடை பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர். நிர்வாக அதிகாரி வடிவேலுப்பிள்ளை சுவாமி சந்நிதியை நோக்கி நடந்தார். ஆனால், அவரோடு கூடவந்த அந்த மனிதரோ, கோபுரவாசல் படிகளில் அன்னமும் நானும் நடையுடன், மின்னல் இடை துவள நாட்டிய உடையுடனேயே ஏறிச் சென்று கொண்டிருக்கும் தில்லையை நயன ஜோடிகளின் நோக்குத் தினவு தீரப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன மிஸ்டர் பத்ரிநாத்! அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நீங்கள் பின்னால் வருவதாக நினைத்துக்கொண்டல்லவா நான் சுவாமி சந்நிதிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.” அதற்குள் எதையோ, கோபுர வாசல் பக்கம் பார்த்துப் புரிந்து கொண்டவர்போல ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே,ஓ! அதுவா விஷயம்? தில்லை விஷயம் இப்போதே முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்ளலாம் நீங்கள்! இந்தப்பூவணை நல்லூர் மட்டுமில்லை.நேற்று அவள் பொட்டுக்கட்டி உரிமைப்பட்ட சாட்சாத் வேதநாதப்பெருமானே எதிர்த்தாலும் சரி! நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளைக் காலை நீங்களும் ‘டைரக்டரும்’ சென்னை செல்லும் போது உங்கள் காரில் ‘தில்லை’யும் இருப்பாள். இந்த வடிவேலுப் பிள்ளையின் சாமர்த்தியம் அப்போது தான் தெரியும் உங்களுக்கு!”

“அதற்குச் சொல்லவில்லை சார்! நீங்கள் செய்வீர்கள், உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் பெண்ணினுடைய உருவத்தை நடனம் என்ற ஜீவகலைக்காகவே பிடித்துப் பிடித்து சிருஷ்டித்திருக்கிறான் சார் பிரமன் எங்கள் மூவிடோனில் ஆறு நடன ஜோடிகள் தண்டத்திற்குச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமி நடுங்கும்படி குதிக்கிறார்கள் சார். இவள் ஒருத்தி இருந்தால் போதும் கலை உலகமே எங்கள் கைப்பொம்மையாகி விடும்!” பத்ரிநாத் என்று அழைக்கப்பட்ட அந்த நடன டைரக்டர் வடிவேலுப்பிள்ளையைத் தூக்கிவைத்துப் பேசினார். தில்லையின் இன்றியமையாமை டைரக்டர் பத்ரிநாத்தின் பேச்சில் ஒவ்வொரு ‘டிகிரி’யாக ஏற ஏற, அவரிடம் பேச வேண்டிய தரகுத் தொகையின் இலக்கத்திற்குப் பின்னால் ஒவ்வொரு ஸைபராகச் சேர்த்து எழுதிக்கொண்டிருந்தார் வடிவேலுப்பிள்ளை தம் மனத்திற்குள்ளே. உண்மையில் பிள்ளை மனம் வைத்துச் செய்ய முற்பட்டுவிட்டாரானால்