பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

980 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

பாழாப் போவான் வடிவேலுப்பிள்ளைக்கு இருந்திருந்தும் புத்தி இப்படியா போகனும்? இது எல்லாம் ‘அவனு’க்குத் துரோகம்! ‘அவன்’ சும்மா விட்டுவிட மாட்டான்!” அர்த்தநாரீஸ்வர குருக்கள் கோபுரவாசலில் நின்று முத்துக் குமார நட்டுவனாரிடம் இரைந்து பேசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்.

“குருக்களே! இதெல்லாம் தலையெழுத்து. நானும் பொன்னியும் எவ்வளவு முட்டிக்கொண்டோம் என்கிறீர்கள்? இந்த வடிவேலுப்பிள்ளையும், கருப்புக் கண்ணாடிக்காரனும், கும்கோணத்திலிருந்து புதுசா வந்தவனும், ஜம்பமாக வீட்டு வாசலில் காரிலே வந்து இறங்கியவுடன், இந்தப் பெண்ணுக்குத் தலைகால் புரியல்லே! அப்படியே சொக்கி மயங்கிப் போயிடிச்சு. அதுனோட பிடிவாதத்துக்கு முன் எங்க வார்த்தை செல்லுபடியாகல்லே! இதோ, இப்போ மணி ஏழரை ஆறது! இன்னும் ஒரு மணிநேரத்தில் ‘தில்லை’ புறப்பட்டிடும்.வேதநாதனின் விருப்பம் நானும் பொன்னியும் தான் மூச்சுள்ள வரை சேவகம் பண்ணவேனும் என்கிறதாக இருக்கிறதோ என்னவோ? யார் கண்டார்கள்? எல்லாம் அவனுடைய அலகிலா விளையாட்டு!” என்று நட்டுவனார் பதில் சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

‘ஆட்டுவித்தார் ஆரொருவர் ஆடாதாரே?’ என்ற தேவாரப் பாடலைத் தாளவாத்தியங்களோடு இனிமையாக முழங்கிக்கொண்டே சனிக்கிழமைத் தேவார பஜனை கோஷ்டி கோபுர வாசலில் நுழைந்தது. அர்த்தநாரீஸ்வர குருக்கள், பஜனை கோஷ்டிக்கு சுவாமி தரிசனம் செய்து வைப்பதற்காகக் கோபுர வாசலிலிருந்து அவர்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்து விரைவாகச் சந்நிதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். சந்நிதிக்குப் போகிறபோக்கில் தேவஸ்தானத்திற்குள்ளேயிருந்து வந்த சம்பாஷணையைக் குருக்கள் சிறிதே தயங்கி நின்று காதில் வாங்கினார்.

“என்ன பிள்ளைவாள்? நான் ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டே இருக்கேன்? நம்ம பாங்கிலே ஒரு ‘டிபாஸிட்’ போட்டு வையுங்களேன். ஒண்ணும் கவனிக்கவே மாட்டேங்கிறியளே?”

“இன்னிக்குக் கண்டிப்பாகக் கவனிக்கிறேன் சார்! (இதைத் தொடர்ந்து வடிவேலுப்பிள்ளையின் சிரிப்பொலி) நல்ல நேரம் பார்த்துத்தான் கேட்டிருக்கீங்க. ஆமாம்; அப்படி ஒர் ஐநூறு போட்டு வைத்தால் கிடக்கிறது. நீங்களுந்தான் விடாமே கேக்கிறியளே? அது சரி இன்னைக்கு சனிக்கிழமை ஆச்சே பாங்கு எத்தனை மணி வரை உண்டு? எனக்கும் கும்பகோணத்துக்குக் கோவில் காரியமா வரவேண்டியிருக்கு. அப்படியே உங்க பாங்குக்கு வந்து காரியத்தை முடிச்சிடலாம் பாருங்க.”

இதற்கு மேல் அர்ச்சகர் அர்த்தநாரீஸ்வர குருக்கள் அங்கே நிற்கவில்லை. “பய! அழுகிப்புழுத்துத்தான் சாகப் போகிறான்” இப்படி முணுமுணுத்த அவர் உதடுகளின் ஒலி இடுப்பில் தொங்கிய சாவிக் கொத்தின் ஒலியில் கலந்து ஐக்கியமாகி விட்டது. காலை எட்டிப் போட்டவராய் இடுப்பிலிருந்து கொத்துச் சாவிகளைக் கையிலே மாற்றிக் கொண்டு நடந்தார் அவர்.