பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/புகழ்த் துறவு 🞸 981


4


காலம் என்ற சிமெண்டுத் தரையில் வருஷம் என்ற பந்து பன்னிரண்டு முறை துள்ளிவிட்டது. மகள் தில்லை வடிவு, பெற்ற தாயாகிய தான் கூறியதையும் பொருட்படுத்தாமல் சினிமாக்காரர்களோடு சேர்ந்து கொண்டு சென்னைக்குப் போய் விட்டாளே என்ற ஏக்கத்திலேயே மனமும் உடலும் உடைந்துபோன பொன்னி, அதிக நாள் உயிர்வாழவில்லை.மகள் சென்னைக்குப்போன மூன்றாவது வருடமே வேதநாதப் பெருமான் அவளைத் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு விட்டார்.

வடிவேலுப்பிள்ளையோ, நட்டுவனாரோ,அர்த்தநாரீஸ்வரக்குருக்களோ, தங்கள் தங்கள் மனநிலையில் பொன்னியின் மரணத்தைப் பெரிதுபடுத்தி அழவோ ஆதங்கப்படவோ இல்லை. அதனால் தானோ என்னவோ, ‘லலிதகுமாரி’ என்ற புதுப்பெயரில் சென்னையில் சினிமா நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த பூவணை நல்லூர்த் தேவதாசி தில்லைவடிவிற்கு யாருமே தாயின் மரணத்தைப்பற்றி எழுதவும் இல்லை!

“இந்தப் பொன்னி போனால் இன்னொரு சின்னி! கோவில் தேவதாசி மிராசை ஏற்றுக்கொண்டு பணிபுரிய வேறு தாசிகளுக்குப் பஞ்சமா, என்ன?” - இப்படி நினைத்தது மட்டுமில்லை, பாலாம்பாள் என்ற அந்தப் புதுத் தேவதாசியை நியமித்தேவிட்டார் பிள்ளை. எல்லோரையும் ஆளும் இறைவனையும் அவன் கோவிலையும் தாமே ஆள்பவரில்லையா அவர்? வேதநாதன்கூட அவர் இட்ட படித்தரத்திற்கு அஞ்சித்தானே வாழ்ந்தாக வேண்டும்?

பொன்னியின் காலம் முடிந்தபின் முத்துக்குமார நட்டுவனாரும் பூவணை நல்லூரில் அதிக நாள் தங்கவில்லை. கும்பகோணத்தில் நாலைந்து பெரிய மனிதர்களுக்குத் திடீரென்று நாட்டியக் கலையின் மேல் ஒரு பற்று ஏற்பட்டதன் விளைவாக நாட்டியப்பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக, நட்டுவனாருக்கு ஒரு செய்தி எட்டிற்று. கும்பகோணத்திற்குப் போய்ச் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்தார். காரியம் நட்டுவனாருக்குச் சாதகமாக முடிந்துவிட்டது. நாட்டியப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் பதவியும், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே கற்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று எண்ணிய சிலர் வீட்டு ‘டியூஷன்'களும் அவருக்குக் கிடைத்தன.அதன்பிறகு பூவணைநல்லூர்ப் பக்கம் அவரைக் காண்பதே அரிதாகப் போயிற்று. கும்பகோணத்துக் கலாரஸிகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் இடையில் ‘முத்துக் குமார்’ என்ற பெயருக்கு 'பிரபலத்துவமும்’ ‘பிரமுகத்துவமும் ஒருங்கே கிடைத்துவிட்டன. வருடங்கள் தோன்றி மறைய மறைய, சமூகமும் அவற்றை மறந்துவிடுவது போல, சினிமா நட்சத்திரம் லலிதகுமாரிக்குப் பழைய பூவணை நல்லூர் வாழ்வின் நினைவு அறவே இல்லாமல் மறந்துவிட்டது. அப்படி மறக்கச் செய்தபின் நினைவூட்டி ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் வேதநாதனுடைய திருவுள்ளம் போலும்!