பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

986 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

மிராசுதாரராக வாழ்வதற்கு வேண்டிய நிலபுலன்கள் அவருக்கு இருந்தன. வக்இல் தொழிலில் வெறுப்புத் தட்டியதும் திருச்சியிலிருந்து கீழத்தேரூரில் தமது பழைய வீட்டைச் செப்பனிட்டுவிட்டுக் குடியேறினார். திருச்சியில் ஐந்து ஆண்டுகள் நடத்திய வக்கீல் தொழிலில் அவருக்கு ஒரு நொடிகூட அமைதி கிடைக்கவில்லை. காவிரித் கரையில் பசுமை சூழ விளங்கும் கீழத்தேரூர் வாழ்வை அவர் மனம் நாடியதுதான் அவர் அங்கே செல்லக் காரணம். மனைவி, மகள், ரகு இவர்கள் சகிதம் கீழத்தேரூரில் குடியேறிய வைத்தியநாதன் நிலங்களை மேற்பார்ப்பதிலும் தமக்குரிய இரண்டொரு தென்னந்தோப்புக்களைக் கம்பி வேலியிட்டுப் பாதுகாப்பதிலுமாகப் பொழுதைக் கழித்து வந்தார். விரைவில் அவர் வேண்டுகோளின்படி ரகுநாதன் சென்னைக்குக் கல்லூரிப்படிப்புக்குச் சென்றான்.திருச்சியிலுள்ளபோதே அவன் எஸ்.எஸ்.எல்.வியை முடித்திருந்தான்.மாலதியை நான்காம் பாரத்தோடு நிறுத்திவிட்டார் வைத்தியநாதன் நாட்கள் வேகமாக ஒடி வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய்க் கழிந்து கொண்டே இருந்தன. ரகுநாதன் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான். கீழத்தேரூரில் வைத்தியநாதன் இந்த மூன்று வருடங்களில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருந்தார். திருச்சியில் வக்கீலாக இருந்தபோது பல பெரிய மனிதர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களோடு நல்ல அறிமுகம் பெற்றிருந்த அவர் இந்த வேலைகளைச் செய்ததில் வியப்பில்லை. ஊரார் தனி மதிப்புடன் அவரைப் போற்றி வந்தனர். தபாலாபீஸ், செகண்டரி பள்ளிக்கூடம்,மின்சார வசதி முதலியவைகளைக் கீழத்தேரூர் அவரால் பெற்றது. பொதுத் தொண்டுகளுடன் இவ்வாறு அமைதியாகக் கழிந்து வந்தது அவருடைய வாழ்வு.

பி.ஏ. பாஸ் செய்ததும் ஊரோடு நிலபுலன்களை மேற்பார்த்துக்கொண்டு இருக்கும்படியாகச் சொன்னார் வைத்தியநாதன். ரகுநாதன் எங்கேயாவது வேலை பார்க்க விரும்பினான். வைத்தியநாதன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. கடைசியில் பம்பாயில் தென்னிந்தியர் ஹைஸ்கூல் ஒன்றிற்கு ‘அஸிஸ்டெண்டாக’ வந்து சேர்ந்தான். மாலதிக்கும் அவனுக்கும் கலியாணத்தை முடித்து ஊரோடு கட்டிப்போட்டு விடலாம் என்று எண்ணிய வைத்தியநாதனுக்குப் பெரிய ஏமாற்றமாகப் போயிற்று. அதற்கு மேல் மறுத்துச் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. சரி போகட்டும் அவன் போக்கில் விட்டுப் பிடிப்போம் என்று இருந்துவிட்டார்.

மாமாவின் வேண்டுகோளைத் தவிர்க்கமுடியாமல் விடுமுறைகளுக்கு வந்து போய்க்கொண்டிருந்தான் ரகுநாதன். இப்போது மாலதிக்கு வயது பதினைந்து. கொடிபோல வளர்ந்திருந்தாள். காலம் தான் வளர்ந்தது போலவே அவள் உடலும் அழகின் பொலிவு பெற்று வளருமாறு செய்திருந்தது. குதிகால்வரை தொங்கும் சாட்டைப்பின்னலுடன், அதன் நுனியில் குஞ்சலங்கள் ஆட, அவள் நடந்து செல்லும் காட்சி ஒரு பெரிய காவியம், காதில் புதிதாக அழகான முத்துச் சிமிக்கிகளை வாங்கி அணியச் செய்திருந்தார் தந்தை நீண்ட நாசியும் அதன் கீழ் ரோஜா இதழ்களின் விரிவும்,மாம்பழக்கன்னங்களுமாக-கன்னிப்பருவத்து அழகு பூர்ணமுற்று விளங்கின.