பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/நினைத்ததும் நடந்ததும் 🞸 987

கண்களில் ஏதோ ஒரு புதிய குறுகுறுப்பு. அந்தக் குறு குறுப்பை வெளியேற விட்டுவிடாது காப்பது போன்ற, கட்டும் வரிசையும் குலையாத இமையும் புருவமும் தனிச் சோபை பெற்றிருந்தன. வாய்க்கு வாய் ‘ஏண்டா ரகு கலியாணத்தை வருகிற வைகாசியில் வைத்துக் கொள்வோமாடா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். அப்படிக் கேட்ட ஒரு சந்தர்ப்பத்திலேதான் பிரைவேட்டாக எம்.ஏ. எழுதப்போவதாகவும் அதற்குப் படிக்கவேண்டுமென்றும் கூறிவைத்தான் ரகுநாதன். அதற்கு மேல் வைத்தியநாதனும்அவனைக் கிண்டிக் கிளறி வற்புறுத்தவில்லை. "கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்துக்கொண்டு போகப்போகிறது. தானாகச் சம்மதிக்கிறான்!” என்று இருந்துவிட்டார். ஆனால், ஒன்றுமட்டும் அவருக்குப் புரியாமலே இருந்தது. தங்கப்பதுமைபோல வளைய வளைய வரும் மாலதியை ஏன் பாராமுகமாக இருக்கிறான் ரகு? இந்தப் புதிரை விடுவிக்க அவரால் முடியவில்லை. இதற்குள் ஒருவழியாக விடுமுறை முடிந்து ரகுநாதன் பம்பாய் கிளம்பினான்.மாமாவும் மாலதியும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். நூறு தரமாவது உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படியாகச் சொல்லியிருப்பார் மாமா. கண்ணிர்த்துளிகள் உருண்டு திரண்டு கொண்டிருந்த மாலதியின் கூரிய விழிகளின் கோணக்கடை நோக்கு ரகுநாதன் நெஞ்சை ஊடுருவ முயன்று கொண்டிருந்தது. வண்டி ஒரு முறை கூவிவிட்டுக் கிளம்பியது! ரகுநாதனின் கண்களும் அவள் பார்வையைச் சந்தித்தன. ஆனால், அந்தச் சந்திப்பில் அவள் மேல் அவனுக்கு அனுதாபம் ஏற்பட்டதேயன்றி, ஆர்வமில்லை, அவாவில்லை. நூற்றி ஒன்றாவது தடவையாக மாமா உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படியும் அடிக்கடி கடிதம் போடும்படியும் சொல்லி விடை கொடுத்தார். வண்டித்தொடர் வேகமாக மறைந்துகொண்டே வந்தது, வாழ்வின் நியதித் தொடர்போல.

தாதரில் இறங்கிய ரகுநாதனை ஒரு ஜோடி மலர்விழிகள் தேடிக் கண்டு கொண்டன. வண்டியிலிருந்து இறங்கிய அவனைக் கைலாகு கொடுத்து இறக்கினாள் அந்த யுவதி.“சரோ! நீ ஸ்டேஷனுக்கு வருவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் ரகுநாதன். “அப்படியானால் இன்று வருகிறேன் என்று ஏன் கடிதம் போட்டீர்களாம்?” குறும்புப் புன்னகை ஒன்றை இதழ்க் கடையிலே நெளிய விட்டுக் கொண்டே கேட்டாள்.அந்த யுவதி “சூரியன் மலர்ந்துவிடு என்று சொல்லி அனுப்பியா தாமரை மலர்கிறது” என்று பதிலளித்தவாறே அவள் தயாராகக் கொண்டுவந்து நிறுத்தியிருந்த காரில் ஏறினான் ரகுநாதன். அவள் டிரைவர் ஸ்தானத்தில் அமர்ந்துகொண்டாள்.ஸ்டியரிங்கைப் பிடித்து வளைத்தவாறே “ஏது பெரிய கவியாகி விடுவீர்கள் போலிருக்கிறதே?” என்றாள் அவள். அதன் பிறகு ஏதேதோ பேசினார்கள். வேகமாகத் தார் ரோட்டைக் கடந்து செல்லும் காரைப்போலத் தொடர்ந்து மேற்சென்று கொண்டிருந்தது அவர்கள் பேச்சு. இது காதலர்கள் விஷயம்! இதில் இதற்கு மேல் தலையிடுவது நியாயமில்லை. எனவே, கதாசிரியனாகிய என்மேல் நேயர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. உங்கள் கோபத்தைப் பொறுத்துக்