பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

988 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

கொண்டாலும் பொறுத்துக் கொள்ளலாம். ரகுவும் சரோஜாவும் இப்படி நாகரிகமில்லாமல் நடந்து கொண்டதற்காக என்னைக் கோபித்துக்கொண்டால் அது பொறுத்துக்கொள்ள முடியாதது.ஆகையால்,இப்போது இந்த நிலையில் அவர்களை இப்படியே விட்டு விடுகிறேன்.

ரகுநாதன் பம்பாய் வந்து மூன்று, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. மாமாவிடமிருந்து வாரம் தவறாமல் கடிதம் வந்துவிடும். கலியாண விஷயத்தைப் பற்றியும் குறிப்பிடத் தவறியிருக்காது. பதில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கடிதத்தை எடுப்பான் ரகு உடனே ஏதாவது நினைவில் அப்புறம்பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடுவான். மலபார்ஹில்ஸ் பார்க்கில் சரோஜாவுடன் சுற்றி வருவதற்கே அவனுக்கு நேரம் காண்பதில்லை. இந்த அசட்டையில் மூன்று மாதங்களாக மாமா எழுதியிருந்த கடிதங்களுக்குப் பதிலே போடவில்லை அவன். அந்த நிலையில்தான் அன்று அக்கடிதம் வந்தது. ரகுநாதன் துணிவடைந்தான். இனியும் மாமாவை ஏமாற்றுவதில் பயனில்லை. கலியாண விஷயமாக அவருக்குத் தெளிவாக எழுதிவிடவேண்டும். சரோஜாவுக்குத் தன் உள்ளத்தை ஒப்படைத்திருக்கும் செய்தியை மாமாவுக்கு எழுதிவிட வேண்டுமென்றுதான் அவன் முடிவு செய்தான். ஆனால், உடனடியாக என்னவோ எழுதத் தோன்றவில்லை. சோர்வுடன் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டிருந்தான்.அப்போது ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ ஆசிரியர் சோமநாத சர்மாவின் கார் டிரைவர் உள்ளே நுழைந்தான். “ஐயா உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்! ஏதோ முக்கிய விஷயமாகப் பேசவேண்டுமாம், ஆபீஸில்தான் இருக்கிறார்கள்- என்று கூறி முடித்துவிட்டு நின்றான் வந்தவன். ரகுநாதன் கடிதத்தை மடித்து உள்ளே வைத்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். அவன் முகத்தோற்றத்தில் பலவித உணர்ச்சிகளுக்கு ஒரே நேரத்தில் அவன் ஆட்பட்டிருக்கவேண்டும் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. “சரோஜாவின் தகப்பனார் இப்படித்திடீரென்று கூப்பிடுவதற்குக் காரணம்? அவள் ஏதாவது சொல்லி அப்பாவைக் கணிய வைத்திருக்க வேண்டும். அல்லது கண்டித்து அனுப்பத்தான் கூப்பிட்டிருக்கிறாரோ? சிந்தனை, காரின் வேகத்தோடு போட்டியிடுவதுபோல வளர்ந்து கொண்டிருந்தது. கார் ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ காரியாலயத்தின் வாசலில் வந்து நின்றது. பம்பாயிலிருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரிகளில் முன்னணி இடத்தைப் பெற்றது வாய்ஸ் ஆப் இந்தியா. அதன் காரியாலயமும் முன்னணிப் பெருமைக்கு ஏற்றதுபோல வானளாவ அமைந்திருந்தது. டாக்டர் எஸ்.என்.சர்மா எம்.ஏ.பி.எச்டி என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்த ஓர் விசாலமான அறை வாசலில் வந்து நின்றான் ரகுநாதன். வெளியே இருந்த பியூனிடம் சொல்லி அனுப்பினான். உள்ளே சென்ற பியூனுடன் சர்மாவும் வந்தார்.

"வா! வா. உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ரகு, டிரைவரைக் காருடன் அனுப்பியிருந்தேனே! வந்தானோ?...”

"ஆமாம்! அவன் வந்து சொன்னான்.உடனே வந்தேன்.முக்கியமான விஷயமாகப் பேசவேண்டுமென்று சொன்னதாகச் சொன்னான்.” ரகு நிறுத்தினான்.