பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————————இரண்டாம் தொகுதி/நினைத்ததும் நடந்ததும் 🞸 989

சர்மாவின் முகத்தில் என்றுமில்லாத குறுகுறுப்பான புன்னகை தவழக் கண்டான் ரகுநாதன். இருவரும் நாற்காலிகளில் எதிரும் புதிருமாக அமர்ந்தனர்.

"ஆமாம் மிஸ்டர் ரகுநாதன்! உங்களை என் பெண்ணுக்கு டியூஷன் மட்டும்தானே சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அதற்கு ஏற்ற பீஸும் கொடுத்துவிட்டேன். நீர் என்னைக் கேட்காமலே என் பெண்ணின் மனத்தைத் திருடிக் கொண்டது பெரிய குற்றம் அல்லவா?’அதே குறுகுறுத்த புன்னகையுடன் சர்மா பேசினார். ரகுநாதன் ஆடு திருடின கள்ளன் போல விழித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் சரோஜா சொன்னாள் போகிறது; நீர் ஒரு புதிய பில்ஹணியம் நடத்திவிட்டீர். இந்தப் பள்ளிக்கூடத்து வேலைக்கு ஒரு முழுக்குப்போட்டுவிட்டு இங்கே என்னோடு வந்து விடும்.அடுத்த மாதம் சரோஜா பி.ஏ. எழுதியானதும் உங்கள் திருமணத்தை முடித்துவிடலாமென்றிருக்கிறேன். ஒய்! சும்மா கூச்சப் படாதேயும்! பேசுங்கள், மாப்பிள்ளை ஸார்!” சர்மா கிண்டலும் கேலியுமாக ரகுநாதனைத் திகைக்க வைத்தார். யாரோ தன் தலையில் அமுதத்தை மழையாகப் பொழிந்தது போலிருந்தது ரகுநாதனுக்கு. சோமநாதசர்மா இவ்வளவு பரந்த உள்ளம் உடைத்தவராக இருப்பாரென்று ரகுநாதன் கனவில்கூட நினைத்திருக்க மாட்டான். எதிர்பாராத மகிழ்ச்சியில் அதிர்ச்சியடைந்து, சிலைபோலக் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்து கொண்டிருந்த அவனைப் பார்த்து, சர்மாவே மீண்டும் பேசினார். பேச்சில் அதே குறுகுறுப்பும் கேலியும் இருந்தது.

“சரி மாப்பிள்ளை. இப்பொழுது நீர் போய் வரலாம். எனக்கு ஒரு முக்கியமான தலையங்கம் எழுத வேண்டியிருக்கிறது. தவிர சரோவும் வீட்டில் உம்மைத் தேடிப் போயிருக்கலாம். அவளுடைய ஏமாற்றத்தை நான் சம்பாதித்துக் கொள்வானேன்?கூடிய சீக்கிரம் இப்படி நீங்கள் ஒருவரை ஒருவர் தேடிப் போகாதபடி பார்த்துக்கொள்ள வழிசெய்துவிடுகிறேன்.” கூறியவாறு சர்மாவாய்விட்டுச் சிரித்தார். கூச்சமும் நாணமும் மேலிட்டதனால் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலே விடைபெற்றுக் கொண்டான் ரகுநாதன்.

வீட்டிற்கு வந்தரகுநாதன் திடீர் மகிழ்ச்சியால் பித்தனாகி விடுவான் போலிருந்தது. டிராயரைத் திறந்த அவன் அவசரமாக அதனுள் திணித்திருந்த கீழத் தேரூரிலிருந்து வந்த கடிதம் மேலாகக் கிடக்கக் கண்டான்.

மீண்டும் ஒரு முறை அதைப் படித்த பின் அவன் மனம் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கியது. பிள்ளைப் பருவத்திலிருந்து தாயாகவும் தந்தையாகவும் இருந்த மாமாவின் வேண்டுகோளுக்கு என்ன விடை சொல்வது? சரோஜாவின் உயிர்க் காதல், அவள் தந்தை சர்மாவின் பரந்த அன்பு, ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ வின் துணையாசிரியர் பதவி. இவ்வளவும் அவனுக்காக இங்கே காத்திருந்தன. இந்த வாழ்க்கை எதிர்காலக் கனவாக அவனிடம் ஊறிப் போய் இருந்தது. இதை விட்டுவிட்டுக் கீழத் தேரூரின் இருட்டு நிறைந்த சூனிய வாழ்வை நினைத்தால் அவனுக்கு எங்கோ மயானத்திற்குப் போவது போல இருந்தது.