பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

990 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

மாமா நன்றி செலுத்தத் தகுந்தவர்தான். அதற்காகப் பேரும் புகழுமாக வாழும் இந்த பம்பாய் வாழ்வும் அகில உலகப் புகழ் பெற்ற ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் பதவியும் பலியிடப்படத்தான் வேண்டுமா? அப்படியே எல்லாம் செய்துவிட்டாலும், சரோவை மறந்து அவனும், அவனை மறந்து சரோவும் வாழ முடியாது என்ற நிலை இருக்கும்போது, அவன் எப்படி மாலதியை எண்ண முடியும்? ரகு சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

இறுதியில் அவன் மனம் கல்லாகி விட்டது.நன்றி உணர்ச்சி, உறவு முதலியயாவும் இறுகி மரத்துப்போன நிலையில் அவன் தன்னை இருக்கச் செய்துகொண்டான். அதோடு இருந்திருந்தாலும் பரவாயில்லை. தன்னைப் பற்றி தன் மாமாவும் கீழத் தேரூரும் சற்றும் நினைவே கொள்ள முடியாதபடி ஏதாவது செய்ய விரும்பினான். எவ்வளவோ பெரிய பெரிய திட்டங்கள் அவன் மனத்தில் உருவாயின. இறுதியில் ஏதோ முடிவிற்கு வந்தவன்போல் தபாலாபீஸிலிருந்து தந்தி பாரம் ஒன்றை வாங்கி வருமாறு கீழே இருந்த பையன் ஒருவனை அனுப்பினான். பையன் தந்தி பாரத்துடன் வந்தான்.

தந்தி பாரத்தில் ரகு எழுதியவை இவைதான். தன்னுடைய நண்பன் ஒருவன் கொடுத்திருப்பதாக அத்தந்தியை அமைத்து, ‘ஒரு வாரத்திற்கு முன்பு, தாதரிலிருந்து வரும் வழியில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி, ரகு இறந்து விட்டான்' என்பதாய்ச் செய்தியை நண்பனுக்காக அனுதாபப்பட்டு எழுதுவதுபோல எழுதிக்கொண்டான். இதை எழுதும்போது அவன் கைகள் நடுங்கின. எழுத்தில் தன்னைக் கொன்று கொண்டாலும் நடுக்கம் நடுக்கம்தானே? இதிலுள்ள அசட்டுத்தனத்தைப்பற்றிச் சிந்திக்க நேரமில்லை அவனுக்கு. எவ்வளவோ நாள் எப்படியெல்லாமோ இருக்கும் மனநிலைகள் சூழ்நிலைக்கு ஏற்ப வருகின்ற முடிவுகளுக்கு அடிபணிந்துவிடுகிறது.

ரகுநாதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தந்தியை நண்பன் கொடுத்திருப்ப தாக அமைத்துள்ளமையினால், அந்த நண்பன் எந்தப் போஸ்டாபீஸிலிருந்து அதைக் கொடுக்க முடியுமோ, அங்கிருந்து கொடுப்பதற்காக எழுந்தான் ரகு.

மின்சார ரயிலில் ஏறிய அவன் தந்தி பாரம், பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். இரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவன் குறிப்பிட்ட போஸ்டாபீஸ் உள்ள இடத்தில் இறங்கிக் ‘காரியத்தை’ முடித்து விடுவான். அதற்குப் பின் ஏதோ கீழத் தேரூரில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றிய கற்பனைகள், இங்கே தானும் சரோவும். இப்படி ஒடிக்கொண்டிருந்தது அவனுடைய நினைவு.

சடசடவென்று ஆயிரம் பேரிடிகள் இடித்தாற்போல ஒரு பேரோசை ஒரு பெரிய விபத்து. பலர் தூக்கி எறியப்பட்டனர். முன் ஸீட்டில் அமர்ந்திருந்த ரகு சரியாக இரண்டு இரயில்களுக்கும் நடுவே தூக்கி வீழ்த்தப்பட்டான்.

இரும்புச் சட்டங்களுக்கு இடையே நொறுங்கிக் கொண்டிருந்தது அவன் உடல், மோதிய வேகத்தில் அதிர்ச்சி தாங்காது எதிர்ப்புறமாக வந்த வண்டி ஒன்று சரியாக