பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

994 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

அந்தக் கடலுக்குள் நுழைந்த பிறகுதான் அதிலுள்ள இன்ப துன்ப அனுபவங்களைப் பிரத்தியட்சமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது” என்ற பொருளுக்குரிய அந்த ஆங்கிலக் கவிதை ரங்கநாதனின் கண்களில் பட்டது. ‘புரொபஸர் ரங்கநாதன் எம்.ஏ.’ என்ற திறமைக்கு இருப்பிடமாகிய பெயர் பெற்ற அவன், இந்தப் பாடலை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் பிரம்மிக்கும்படி பேசிவிடமுடியும். ஆனால், இன்று அப்படி முடியாது. வாழ்க்கையைப் பற்றி அந்தப் பாடல் கூறும் கருத்து அவனுடைய சொந்த அனுபவத்தில் மறு பிரதியாக இருந்ததுதான் அதற்குக் காரணம்.

இராமன் பிரிவு தசரதனைத் துன்பங் கொள்ளச் செய்த நிலையைக் கவிகள் நூற்றுக்கணக்கான உவமை உருவகங்களால் வர்ணித்துப் பாடுவதும், மேடைப் பேச்சாளர்கள் அந்தப் பாடல்களில் இரண்டொன்றை வைத்துக்கொண்டே மூன்று மணி நேரம் மூச்சு விடாமல் பேசுவதும் சாத்தியம்தான். ஆனால், தசரதனே அந்தத் துன்பத்தை அப்படி வாய் திறந்து பேசுவதுதான் சாத்தியமில்லை. உண்மைத் துன்பம் என்பது உள்ளத்தோடும் உணர்வுகளோடும் ஒடுங்குவது. அது மென்மையும் தனிமையும் கலந்த முறையில் தன்னில் மட்டும் வெளிப்படும். கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகை நம்பிக் கரையிலிருந்து துணிவோடு புறப்பட்டுவிட்டது போல ஜானகியின் காதலை நம்பிப் பெற்றோர்களின் உறவை அறுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவனுக்குத் தெரிகிறது. இதே உண்மை அன்று ஜானகியை ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொள்ளும் போது சிறிதளவும் மனத்தில் தோன்றாமலிருந்துவிட்டது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இளமை நெஞ்சத்திற்குச் சிந்திப்பதில் வேகம் இருப்பதுபோல மோகத்திற்கு அடிமைப்படுவதிலும் வேகம் இருக்கும் போலும்.

"ஜானகியோடு ரிஜிஸ்தர் மணம் செய்துகொள்ளப்போகும் செய்தி காதில் விழுந்த உடனேயே பரம வைதிகரான ஜகந்நாதாச்சாரியார்,“இனி இந்த வீட்டு வாயிற்படியில் காலை வைக்கக்கூடாது. உன் முகத்தில்கூட விழிக்க மாட்டேன். உன் மேல் படிப்பிற்காக என்னிடமிருந்து ஒரு சல்லியும் எதிர்பார்க்கக் கூடாது” - என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவன் தாய் அவனுக்காக எவ்வளவோ பரிந்து பேசியும் பயனில்லாமற் போயிற்று. இவ்வளவிற்கும் தன் மனம் கலங்காமல் துணிவோடு இருக்குமாறுசெய்த அவ்வளவு தூரம்அல்லவா, ஜானகி நம்மைக் கவர்ந்து நம் மனத்தில் மோகத்தை விதைத்திருந்தாள்!.பி.ஏ. இரண்டாம் வகுப்பில் தேறியிருந்த நாம் காலை மாலை நேரங்களில் ஒரு டியூடோரியல் காலேஜில் டியூடராக இருந்து அப்போதும் ஜானகியோடு வாழ்க்கையை நடத்தினோமே.இதே வீட்டில் அந்தப் புது வாழ்விலிருந்த இன்பம் இப்போது எங்கே போயிற்று? பகல் நேரங்களில் ‘எம்.ஏ.’ வகுப்பில் காலேஜுக்கு ஆஜராகியும், காலை மாலைகளில் டியூடராகியும் நாம் சம்பாதித்துக் கொண்டே மேல் படிப்புப் படிக்கும் அளவிற்கு அவள் அன்று துணிவைக் கொடுத்திருந்தாள்!”

ஆனால் . ஆனால் இன்றல்லவா தெரிகிறது. காதல் என்ற அந்தப் புது மணமலர் உதிர்ந்து காய்ந்து போகவும் முடியும் என்ற பயங்கர உண்மை புத்தம் புதிய வார்ப்பில்